மருந்து மோசடிக்கு உடந்தையாக இருந்த லஞ்ச அதிகாரிகளின் பட்டியல் தயாராகிறது
சென்னை: காலாவதியான மருந்துகளை நோயாளிகளிடம் விற்ற மீனாட்சி சுந்தரத்திடம் எந்தெந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கினார்கள் என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் வெடித்துக் கிளம்பிய காலாவதி மருந்து மோசடி விவகாரத்தை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், ஐஜி மஞ்சுநாதா, டிஐஜி கண்ணப்பன், சூப்பிரண்டு மல்லிகா ஆகியோர் மேற்பார்வையில், துணை சூப்பிரண்டுகள் பரணிகுமார், சுப்புலட்சுமி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
மீனா ஹெல்த்கேர் என்ற பெயரில் சென்னையில் நிறுவனத்தை நடத்தி, காலாவதியான மருந்துகளை புதியது போல பேக்கிங் செய்து விற்று, தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ள மீனாட்சிசுந்தரத்திடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
மீனாட்சி சுந்தரத்தின் மோசடி வேலைகளை அரசாங்க அதிகாரிகள் பலர் லஞ்சம் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்த்தது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சோதனை நடத்துவது போல நிறுவனத்துக்கு அதிகாரிகள் வந்ததும், கமுக்கமாக பெரிய பெரிய தொகைகளை வாங்கிக் கொண்டு, மீனாட்சி சுந்தரத்தின் மோசடிகளை கண்டுகொள்ளாமல் போனதும் அம்பலமாகி இருக்கிறது.
இந்த விசாரணையின் அடிப்படையில், மீனாட்சிசுந்தரத்தின் லஞ்ச வலையில் சிக்கியிருந்த அதிகாரிகள் பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். அவர்கள் மீதும் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.
அரசு மருத்துவமனைகளில் இருந்தும் காலாவதி மருந்துகளை வாங்கி விற்றதாக மீனாட்சிசுந்தரம் போலீசாரிடம் கூறியுள்ளார். அதுபற்றியும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
மீனாட்சிசுந்தரம், அவரது தம்பி மாணிக்கம், சஞ்சய்குமார், பிரதீப் சோர்டியா ஆகிய 4 பேரையும் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் எழும்பூர் 13வது கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதற்காக மீனாட்சிசுந்தரம் உள்பட 4 பேரும் இன்று எழும்பூர் 13வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications