பென்னாகரம்: திமுக 'அய்யா' வண்டிகளையும்தான் போலீஸார் சோதித்தார்கள் – கருணாநிதி
சென்னை: பென்னாகரம் இடைத்தேர்தலின் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக பாமக மற்றும் திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாமக நிறுவனர் ராமதாஸ் கார் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுபற்றி பாமகவினர் பிரச்னை எழுப்பினர். ஆனால் அதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி என அனைவரின் வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் நேற்று, இதுபற்றி குறிப்பிட்ட பாமக எம்எல்ஏ வேல்முருகன், 'எந்த தலைவராக இருந்தாலும், கண்ணியத்துக்காக அவர்கள் வாகனத்தை சோதனையிடுவதை அரசு தடுத்திருக்கலாம்' என கூறினார்.
மேலும், 'எங்கள் அய்யா, சின்ன அய்யா வாகனங்களை நிறுத்தி, அவர்கள் வண்டியை மட்டும் தான் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதிக்கும் கருவியை கொண்டு சோதனை செய்தார்கள்.
ராமதாஸ் 7 மணிக்கு மேல் தான் பிரசாரத்தில் ஈடுபட்டார். தொகுதியில் 12 செக்போஸ்ட்கள் இருந்தன. ஒரு செக்போஸ்டில் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டால் எப்படி பிரசாரம் செய்ய முடியும்' என்றார்
அதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, '27ம் தேதி தேர்தல் என்பதால் 24ம் தேதியே நாம் பென்னாகரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.
அப்போது, என்னுடைய வண்டியும், அதாவது இந்தக் கட்சியினுடைய பெரிய அய்யாவாகிய என்னுடைய வண்டியும், சின்ன அய்யாவான ஸ்டாலின் வண்டியும் சோதனையிடப்பட்டது.
காவல் துறையினர் தேர்தல் நேரத்திலே நடந்து கொண்ட முறைகள் - அவர்கள் உருவாக்கியக் கட்டுப்பாடுகள்- அவர்கள் நடத்திய சோதனைகள் இவைகளுக்கெல்லாம் அரசு பொறுப்பல்ல; தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு' என்றார்.
ஆனால், சோதனை என்ற பெயரிலே சோதனை சாவடிகளில் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக பாமக தலைவர் ஜிகே மணி அவையில் குறிப்பிட்டார்.
பின்னர் உறுப்பினர்களின் விவாதம் மேச்சேரி அடிதடி விவகாரத்துக்கு தாவியது. மேச்சேரி சம்பவத்துக்கு யார் காரணம் என பாமகவினரும், திமுக உறுப்பினர்களும் ஒருவக்கொருர் மீது குற்றம்சாட்டிக் கொண்டனர்.
விவாதத்தின் போது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறுகையில், 'ஒரு கூட்டத்தில் சிலரது பெயரை குறிப்பிட்டு கட்டிப்போட்டு அடித்து போலீசில் ஒப்படையுங்கள் என்று உங்கள் சின்ன அய்யா (அன்புமணி) பேசியிருக்கிறாரே. பத்திரிகைகளிலேயே வந்திருக்கிறது' என்று சுட்டிக்காட்டினார்.
ஆனால் அப்படி எதுவும் பேசவில்லை என்று இடைமறித்து விளக்கமளித்த பாமக தலைவர் ஜிகே மணி, 'அன்புமணி பேசும்போது, என்ன தான் தேர்தல் முறைகேடு நடந்தாலும் 25ம் தேதிக்குப் பிறகு எல்லோரும் தொகுதியை விட்டு போய்விடுவார்கள்.
பிறகு இருக்கும் சில நாள்களுக்கு போய் வாக்கு கேளுங்கள். மக்கள் ஜெயிக்க வைப்பார்கள் என்றார். கட்டி வைத்து உதையுங்கள் என்று செய்தி வரவில்லை. எனவே அமைச்சர் தெரிவி்த்த தகவலை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
ஆனால் அவை 'மறுக்கப்பட்ட செய்தி' என்று சட்டமன்ற குறிப்பேட்டில் இடம்பெறும் என அமைச்சர் அன்பழகன் கூறினார். அதோடு இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications