மேலவை தீர்மானம்: வாக்களிக்காத ஜெ-7 அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை: மீண்டும் சட்ட மேலவையை அமைப்பதற்காக சட்டசபையில் நேற்று வாக்கெடுப்பு நடந்தபோது ஜெயலலிதா உள்பட அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் வாக்களிக்கவில்லை.
மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானத்தை எதிர்ப்பது என்று அதிமுக முடிவு செய்த நிலையில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே அவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல தேமுதிக தலைவர் விஜயகாந்தும் சட்டசபைக்கு வரவில்லை.
இதே போல அதிமுகவைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், ஆர்.டி.கணேசன், சி.வி.சண்முகம் ஆகியோரும் அவைக்கு வரவில்லை. அதிமுகவைச் சேர்ந்த கே.எஸ்.விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் வாக்களிக்கவில்லை.
அதே போல ராஜபாளையம் அதிமுக எம்.எல்.ஏ சந்திராவின் தேர்தல் வெற்றி தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரும் வாக்கெடுப்பில் பங்கெடுக்கும் தகுதியை இழந்தார்.
இதனால், வாக்கெடுப்பு தொடங்கும் முன் பேரவையில் இருந்து வெளியேறுமாறு அவருக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதே போல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபால், பாமகவைச் சேர்ந்த கலிவரதன் ஆகியோரும் வாக்களிக்கவில்லை.
அதே நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த செல்வப்பெருந்தகை தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளார்.
ஆனால், அந்தக் கடிதம் பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளதால் தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்கிறார். அவரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
மொத்தத்தில் 18 பேர் வாக்களிக்கவில்லை. அதேசமயம், நியமன உறுப்பினருடன் சேர்த்து மொத்தம் 216 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
இதில் 155 பேர் ஆதரவு, 61 பேர் எதிர்ப்புடன் தீர்மானம் நிறைவேறியது.












Click it and Unblock the Notifications