சீனாவில் நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 617 ஆனது
யூஷூ: சீனாவின் வடமேற்கு மாகாணமான குவின்காயில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 617ஐ தொட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியிருக்கும் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
ரிக்டர் அளவில் 7.1 என பதிவாகியிருந்த இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் குவின்காய் மாகாணத்தின் ஜூகூ உள்ளிட்ட நகரங்களில் 85 சதவீத வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடிபாடுகளில் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளை தோண்ட தோண்ட சடலங்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டன.
இதுவரை 617 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
உயிர்சேதத்தைப் போலவே இந்த பூகம்பத்தில் ஏராளமான பொருட்சேதங்களும் ஏற்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
ஏராளமான கட்டிடங்கள் முற்றிலுமாக சிதைந்து இடிந்து விழுந்து கிடக்கின்றன.
குவின்காய் மாகாணத்தின் ஜூகூ நகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியை மையமாகக் கொண்டு பூகம்பம் ஏற்பட்டது.
கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications