காங்கிரசுக்கு சசிதரூர் என்ற 'திருகுவலி' தேவையா?-வீரமணி
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு சசி தரூர் என்ற ஒரு தலைவலி- திருகுவலி தேவையா?. இவர் போன்றவர்களை வெளியேற்றுவதுதான் நாட்டிற்கும், ஆட்சிக்கும், அக்கட்சிக்கும் நல்லது என்று கூறியுள்ளார் திராவிட கழக தலைவர் வீரமணி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அண்மையில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையிலிருந்து மாறி, மிகப்பெரிய வர்த்தக சூதாட்டமாகி விட்டது. ஊழல்களின் சுரங்கமாகவும் ஆகிவிட்டது.
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இதில் புரளுகின்றன. விளையாடுகின்ற விளையாட்டாளர்களையும் நல்ல விலை கொடுத்து வாங்கியே வெற்றி-தோல்விகளை முன்கூட்டியே நிர்ணயிக்கின்றனர்.
முன்பெல்லாம் ஆண்டுக்கொருமுறை, இருமுறைதான் இது சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற பெரு நகரங்களில் சில நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்.
ஆனால் இப்போது ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகள் உருவாகி ஏல மோசடி முதற்கொண்டு பலவும் நடைபெறுவதும், இதில் பல செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள், மத்திய அமைச்சர் நிலையில் உள்ளவர்கள், நட்சத்திரங்கள் ஈடுபட்டு இந்த வர்த்தக சூதாட்டத்தை நடத்துவதும் மிகவும் கேவலமானது.
போட்டியின் மொத்த பணப்புழக்கம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஐ.பி.எல். போட்டிக்கு மேலும் 2 அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டதாம். சமீபத்தில் ஏலத்தின் மூலம் கொச்சி அணி 1530 கோடி ரூபாயும், புனே அணி 1670 கோடி ரூபாயும் கொடுத்தும் ஐ.பி.எல்லில் இடம் பிடித்துள்ளனவாம். இதில் கொச்சி அணி தேர்வு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சி அணியின் விளையாட்டு அமைப்பான ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் கொச்சி அணியை விலைக்கு வாங்கியுள்ளது. அதன் உரிமையாளர் யார் என்று தெரியாதாம். இதனால் கொச்சி அணியை வழிநடத்தப்போகும் உரிமையாளர்கள் யார்? என்ற மர்மம் நீடிக்கிறது.
காஷ்மீரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணுக்கு கொச்சி அணியில் உள்ள 25 சதவிகித பங்கில் 19 சதவீத பங்கு (70 கோடி ரூபாய் மதிப்பு) இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
சர்ச்சைகளை நாளும் உருவாக்கி அதனையே சுவாசிக்கும் வழக்கமாக்கிக் கொண்ட சசி தரூர் என்கிற பெயரும் இதில் பெரிதும் உருளுகிறது. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளான பாஜக, இடதுசாரிகளாலும் பேசப்பட்டு வருகிறது.
இந்த இலவச பங்கு பெற்றதாக கூறப்படும் காஷ்மீர் பெண்ணை இந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் என்பவர் மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். இதனால் நிதி அமைச்சரின் விசாரணைக்கு இவர் அழைக்கப்பட்டு விளக்கம் அளித்துள்ளாராம்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு இப்படி ஒரு தலைவலி- திருகுவலி தேவையா?. இவர் போன்றவர்களை விரைவில் வெளியேற்றுவதுதான் நாட்டிற்கும், ஆட்சிக்கும், அக்கட்சிக்கும் நல்லது என்று கூறியுள்ளார் வீரமணி.
பார்வதி அம்மாள் செய்த குற்றம் என்ன?:
அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையி்ல், இலங்கையில் ஈழப்பகுதியில் அதுவும் ராஜபக்சே அரசின் கண்காணிப்பில் முகாமில் வாழ்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை இயக்க நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் வாழ்ந்தவர். அவரது துணைவியார் பிரபாகரனின் தாயார் பார்வதி (81). பல மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு பக்கவாதத்தினால் தாக்கப்பட்டவர்.
தனது கணவர் வேலுப்பிள்ளை இறந்த செய்தியைக்கூட சரிவரத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உடல்நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தவர்.
நேற்றிரவு 10.30 மணிக்கு மலேசியத் தலைநகர் கோலா லம்பூரிலிருந்து மருத்துவ சிகிச் சையை சென்னையில் பெறுவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு உதவியாக ஒரு நர்சுடன் வந்துள்ள அவரை, சென்னையில் இறங்கி சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது என்று விமான நிலைய அதிகாரிகள் மறுத்து அதே விமானத்திலேயே அவரை கோலாலம்பூருக்கே திருப்பி அனுப்பி உள்ளார்கள். அவரிடம் முறைப்படி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான விசாவும் இருந்துள்ளது.
அப்படியிருந்தும் அந்த முதுமையடைந்த தாயை சென்னையில் சிகிச்சை பெறக்கூட அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பப்படுவதை விட மனிதாபிமானம் அறவே அற்ற கொடுஞ்செயல் வேறு இருக்க முடியுமா?.
இதற்கு யார் பொறுப்பானவர்கள் மத்திய அரசா? அல்லது அதில் பணிபுரியும் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாச அதிகாரிகளா? என்பது நமக்குப் புரியவில்லை. யார் இதற்குக் காரணமானாலும் உலகமே வெட்கித் தலைகுனியக் கூடிய, மத்திய அரசின் செயல் கண்டனத்திற்குரியது.
தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பாகிஸ்தானத்திலிருந்து நோயாளிகள் இங்கே வந்து அறுவை சிகிச்சை மருத்துவம் செய்து திரும்ப வில்லையா? 81 வயதான அந்த அம்மையாருக்கு சிகிச்சை அளித்தால் தீவிரவாதம் இங்கே வந்து புகுந்து கொள்ளுமா?.
மத்திய அரசோ, அதன் அதிகாரம் செலுத்தும் அதிகாரிகளோ, அல்லது உளவுத் துறையோ இந்தச் செயலைச் செய்தாலும், சென்னை விமான நிலையத்தில் இக்கொடுமை நடந்துள்ளபடியால், திமுக அரசுக்கும், முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கும் அவை சில கெட்டப் பெயரைத் தருவதாக அமையாதா?.
ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பது எங்கள் அரசின் கடமை என்றும், தீவிரவாதத்தினைத்தான் நாங்கள் எதிர்ப்பவர்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் கூறியிருக்கிறார்களே, அதன்படி பார்த்தால் பார்வதி அம்மாள் செய்த குற்றம் என்ன? பிரபாகரனுக்கு தாயாக இருந்ததுதானா? என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications