பவர் கட் செய்து வரும் திமுக அரசின் பவரைப் பறியுங்கள் – ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
நெய்வேலி: பவர் கட் செய்து மக்களை இருளில் மூழ்க வைத்து வரும் திமுக அரசின் பவரை மக்கள் பறிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நெய்வேலியில் நேற்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த்து. மின் தடை மற்றும் பற்றாக்குறையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசுகையில், இங்கு திரண்டுள்ள மக்கள் கூட்டத்தால் எனக்கு புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்துவிட்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியாக இருக்குமா என கேள்வி எழுப்பினர். அதற்கு நான், கருணாநிதி என்ற தீய சக்தியை அகற்ற அ.தி.மு.க.,வை துவங்கிய எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்து விட்டு, அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியாக இருக்கும் எனக் கூறினேன்.

கடந்த 2006ம் ஆண்டு எனது ஆட்சியில் மின் மிகுதி மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது மின் பற்றாக்குறை காரணமாக இருளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்து வருகிறது.

மத்தியக் குழுமத்திலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கீட்டு மின்சாரம் வழங்கப்படவில்லை. எரிவாயு ஒதுக்கீட்டையும் மத்திய அரசு குறைத்துள்ளது. பதவி சுகத்திற்காக இதை தட்டிக் கேட்க இந்த அரசு தயங்குகிறது. இதை நான் சுட்டிக் காட்டினால், கடந்த ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை என, கருணாநிதி அறிக்கை விடுகிறார்.

நிலக்கரி இறக்குமதியில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. எண்ணூரிலிருந்து மேட்டூருக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட நிலக்கரி, தற்போது எண்ணூரிலிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேட்டூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன்மூலம் கூடுதலாக ஒரு டன்னுக்கு ரூ.485 செலவழிக்கப்படுகிறது. இந்த லாபம் கருணாநிதியின் குடும்பத்துக்கு போய்ச் சேருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழக மின்வாரியத்துக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்படுகிறது.

இப்போது கருணாநிதியின் கவனம் நிலக்கரி இறக்குமதியில்தான் உள்ளது. தமிழகத்தில் ஒரு அனல்மின் நிலையத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு 140 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. அப்படியானால் 12 அனல்மின் நிலையங்களுக்கும், ஓர் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

இந்தோனேசியாவில் இருந்து 2.1 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியாவில் 82 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படும் நிலக்கரி 103 டாலருக்கு தமிழக மின்வாரியத்தால் வாங்கப்படுகிறது. இதன்மூலம் 1 டன்னுக்கு ரூ.1000 வரை கருணாநிதி குடும்பத்தினருக்குப் போய் சேருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தனியார் அனல்மின் நிலையங்கள் மூலமாக கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாகவும், அதன் மூலம் பல லட்சம் கொள்ளையடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

திமுக அரசின் கையாலாகாததனத்தால் தமிழக மின்வாரியத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.13 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

வடசென்னை அனல்மின் நிலையம் கடந்த 40 தினங்களாக இயங்கவில்லை. இதன்மூலம் வருவாய் இழப்பு ரூ.70.56 கோடி. மின்வாரியத்தின் மோசமான செயல்பாட்டாலும், பராமரிப்பின்மையாலும், அலட்சியத்தாலும் தமிழக மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 522 கோடி இழப்பு ஏற்படுகிறது.

தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் ஆறு மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், அனைத்து தொழில்களும் பாதிக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இரவில் மக்கள் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை.

இதைக் கேட்டால், மக்கள் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பழகன் கூறுகிறார். ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அன்னிய நாட்டு கம்பெனிகளுக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்காக மண்ணின் மைந்தர்கள் இருளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர்.

'பவர்' கட் செய்து வரும் தி.மு.க., ஆட்சியின் பவரை நீங்கள் பறிக்க வேண்டும். வரும் 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்றார் ஜெயல்லிதா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+