மீண்டும் கலைவாணர் அரங்கம்-அரசு ஊழியர்களுக்கு 1500 குடியிருப்புகள்
சென்னை: புதிய சட்டசபை கட்டுவதற்காக இடிக்கப்பட்ட கலைவாணர் அரங்கம் ரூ. 50 கோடி செலவில் மீண்டும் கட்டப்படவுள்ளது.
சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை சார்பாக பாசனம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான கொள்கை விளக்க குறிப்புகளை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார்.
அதில் இடம் பெற்ற புதிய அறிவிப்புகள் விவரம்:
புதிய சட்டசபை கட்ட ஏதுவாக கலைவாணர் அரங்கத்தை அகற்ற வேண்டியதாயிற்று. கலைவாணர் அரங்கம் பல்வேறு வகையில் பயன்பட்டது.
மீண்டும் அனைவருக்கும் பயன்படும் வகையில் கலைவாணர் அரங்கம் நவீன கூட்டரங்கமாக கட்டப்படும். அதில் 1,500 பேர் அமரலாம். இந்த புதிய கலைவாணர் அரங்கம் ரூ. 50 கோடி செலவில் கட்டப்படும்.
அதே போல தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களுக்கு ரூ. 175 கோடி செலவில் 1,500 குடியிருப்புகள் கட்டப்படும்.
மணல் குவாரி மூலம் ரூ.142 கோடி வருமானம்:
தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரம் மொத்தம் 853 டி.எம்.சி. அண்டை மாநிலங்களில் இருந்து 261 டி.எம்.சி. தண்ணீர் வருகிறது. தமிழ்நாட்டில 78 பெரிய அணைகளும், 7 சிறிய அணைகளும் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 233.20 டி.எம்.சி.
மாநிலத்தின் மொத்த பாசன பரப்பளவு சுமார் 33.93 லட்சம் ஹெக்டேர்.
கூவம் ஆற்றை சீரமைக்கும் பணியின் முதல் கட்டமாக சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளில் உள்ள கூவம் கரையை ஆக்கிரமித்துள்ள ஆட்டோ மற்றும் மோட்டார் உதிரிபாகங்களின் சிறு தொழிற்சாலைகளை சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ள ஆம்பூருக்கு மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.
புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் இருந்த சுமார் 1,150 ஆக்கிரமிப்புகள் கடந்த அக்டோபர் மாதம் அகற்றப்பட்டு மாற்று இடம் தரப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு வராமல் தடுக்க அழகிய பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.
பரம்பிக்குளம்- ஆழியாறு திட்ட ஒப்பந்த மறு ஆய்வு, நெய்யாறு- இடகரை பாசன திட்டம், பம்பா அச்சன் கோவில்- வைப்பாறு இணைப்பு, பாண்டி யாறு- புன்னம்புழா திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற தமிழக அரசு, கேரள அரசுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தில் கணேசபுரம் என்ற இடத்தில் நீர்தேக்கம் கட்டப்படுவதை தடுக்கவும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
2009-2010 நிதியாண்டில் மார்ச் வரை தமிழ்நாட்டில் 130 மணல் குவாரிகள் மூலம் ரூ.142.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2003ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.840.37 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தமிழ்நாடு புதிய சட்டமன்ற வளாகம் 425.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதன் மேற்கூரையாக 100 அடி உயர கோபுரம் (டூம்) அமைக்கப்படுகிறது. தேர் வடிவமைப்பு கொண்ட இதன் எடை 800 டன். 12 மீட்டர் விட்டம் கொண்ட இதில் அமைக்கப்படும் சிறப்பு கண்ணாடி மூலம் சட்டசபை கூடத்துக்குள் இயற்கை ஒளி பரவும். இதன்மூலம் மின் தேவை 20 சதவீதம் குறையும்.
இந்த கட்டிடத்துக்கு தங்க தரச் சான்று கிடைத் துள்ளது. தலைமை செயலக துறைகளுக்கான 7 கட்டிடங்கள் ரூ.279.56 கோடி செலவில் கட்டப்படுகின்றன. கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் ரூ.171.78 கோடி செலவில் நவீன முறையில் கட்டப்படுகிறது.
சென்னையில் பல் மருத்துவ மனைக்கு ரூ.13.66 கோடியில் புதிய கூடுதல் கட்டிடம், சென்னை எழும்பூர் மகப்பேறு குழந்தைகள் மருத்துவ மனையில் ரூ.56.32 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் ரூ.16.65 கோடி செலவில் குழந்தை நல சிறப்பு கட்டிடம்,
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.41.20 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை நந்தனம் வேளாண்மை பொறியியல் துறை வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.70.20 கோடி செலவில் புதிய கட்டிடம் இதுபோன்று பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.1324.12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
ரூ.100 கோடி செலவில் தடுப்பு அணைகள்:
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ரூ. 100 கோடி செலவில் தடுப்பு அணைகள் கட்டப்படும். காவிரி டெல்டா விவசாயிகள் பயன்பெற வாய்க்கால்கள் தூர்வார ரூ. 12 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்துக்குள் இந்த பணி முடிவடையும்.
மேட்டூர் அணைக்கு கீழ் கல்லணையில்தான் தடுப்பணை உள்ளது. இனி கரூர், நாயனூர் கிராமத்தில் ரூ. 180 கோடி செலவில் கட்டளை அணை தரம் உயர்த்திக் கட்டப்படும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications