சிஆர்ஆர் மேலும் 0.25% உயர்வு!
மும்பை: சிஆர்ஆர் எனும் ரொக்க இருப்பு விகிதத்தை 25 புள்ளிகள் அடிப்படையில் உயர்த்தியுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.
ரிவர்ஸ் ரேட் மற்றும் ரெபோ ரேட் விகிதங்களையும் கால் சதவீதம் உயர்த்தியுள்ளது.
நாட்டில் புழக்கத்தில் உள்ள உபரி ரொக்கம் ரூ 12500 கோடியைக் குறைப்பதற்காகவே இந்த உயர்வை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த அறிவிப்பின் மூலம் இன்று முதல் சிஆர்ஆர் விகிதம் 5.75 சதவிகிதமாகவும், ரெபோ ரேட் ( ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி ) 5.25 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெபோ (வங்கிகளின் உபரி ரொக்கத்தை வாங்க ரிசர்வ் வங்கி தரும் வட்டி) 3.75 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது.
இந்த வட்டி உயர்வுகள் சந்தை நடவடிக்கைகளை பாதிக்காது என்றும், பணவீக்கத்தின் அடிப்படைக் காரணியான உபரி ரொக்கத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமே நோக்கம் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அதே நேரம் பொருளாதார மீட்சியை இந்த வட்டி உயர்வுகள் எந்த விதத்திலும் பாதிக்காது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் டி சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வு, பணவீக்கம் போன்றவற்றை மத்திய வங்கி கூர்ந்து கவனித்து வருவதாகவும் தேவையான நேரத்தில் வட்டி விகிதங்களில் மாறுதல்கள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு நிதிப் பிரச்சினைகளை உரிய முறையில் சமாளித்தாலும், நாட்டின் மொத்த கடனான ரூ 4.57 லட்சம் கோடியை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் பெரிய சவாலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications