பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட ஜெ தான் காரணம்-திருமா
சென்னை: பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பெற்ற தடையாணைதான் காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்னை பெரியார் திடலில் 'பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்ப காரணம் யார்' என்ற தலைப்பில் நேற்றிரவு சிறப்புக் கூட்டம் நடந்தது.
வழக்கறிஞர் சாமிதுரை தலைமையில் நடந்த இக் கூட்டத்தி்ல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 16ம் தேதி இரவு மலேசியாவில் இருந்து சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரை இறங்க அனுமதிக்காமல் தடுத்து, அதே விமானத்தில் மலேசியாவுக்கு இந்திய குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.
இந்திய குடியுரிமை அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொண்டதற்கு, கடந்த 2003ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட தடை ஆணையே காரணம் என்பது தெரிய வருகிறது. 2002ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து பலரும் ஈழத்திற்கு திரும்பினர். அதே போல பிரபாகரனின் பெற்றோரும் தாயகம் திரும்பினர்.
அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிரபாகரனின் பெற்றோர் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அப்போதைய பாஜக மத்திய அரசு அவர்கள் தமிழகத்திற்கு வர தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அந்த தடையின் அடிப்படையில் தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். அதாவது, பார்வதி அம்மாளை திருப்பி அனுப்புவதற்கு அப்போதைய அதிமுக அரசு பெற்ற தடையாணைதான் காரணம்.
எனினும் அதனை காரணம் காட்டி அவரை இங்கு மருத்துவம் செய்ய விடாமல் திருப்பி அனுப்பிய நடவடிக்கை மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த செயலை மனித நேயம் உள்ள எவராலும் சகித்து கொள்ள முடியாது.
முதல்வருக்கு நெருக்கமான திராவிடர் கழக தலைவர் வீரமணி போன்றவர்கள், முதல்வர் கருணாநிதியை வலியுறுத்தி பிரபாகரனின் தாயாரை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பார்வதி அம்மாளை திரும்ப அனுப்ப காரணமானவர்களை தமிழ் சமுதாயம் ஒரு போதும் மன்னிக்காது என்றார் திருமாவளவன்.
ராஜபாளையத்தில் ராஜபக்சே செயலாளர்:
இந் நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்தவர் குவைத் ராஜா என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயலாளர் கிப்ஸ் அபே குணவர்த்தன தலைமையில் ஒரு குழு வந்துள்ளது.
ராஜபாளையத்தில் அவர்கள் தங்கியிருந்த அசோகா லாட்ஜை பாமக செயலாளர் இளங்கோவன், மதிமுக, கவுன்சிலர் யோகசேகரன் மற்றும் சிலர், நேற்றிரவு முற்றுகையிட்டனர்.
அவர்கள், தமிழகத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து டி.எஸ்.பி., முருகேசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications