தவறான சிகிச்சை, காலாவதி மருந்து-பார்வை இழந்த மாணவி: தமிழக அரசு உதவுமா?
சென்னை: தவறான சிகிச்சையாலும் காலாவதியான மருந்தாலும் பார்வை பறி போன சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் துயரத்தை சந்தித்து வருகிறார்.
சென்னை திருவொற்றியூர் கிராஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்-கலாவதி தம்பதியின் மூத்த மகள் சுரேகா (12).
கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சுரேகாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டருகே உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்றனர்.
அவர் சில மாத்திரைகளை எழுதித் தத்தார். அதை சாப்பிட்டும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து
ரத்தம், சிறுநீர் ஆகியவை அப்போது பரிசோதிக்கப்பட்டன.
இந் நிலையில், சுரேகாவின் உடல் முழுவதும் சிறு சிறு கட்டிகள் வந்தன. வாய் பகுதி புண்ணாகியது. கண்கள் இரண்டிலும் ரத்தம் கட்டி, பார்வை மங்கத் தொடங்கியது.
இதையடுத்து அந்த டாக்டரிடமே மீண்டும் காட்டியபோது, வீரியம் அதிகமான மாத்திரை சாப்பிட்டதால் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதையடுத்து சுரேகாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு மாத சிகிச்சைக்குப் பி்ன் கட்டிகளும், வாய் புண்ணும் மறைந்தன. ஆனால், கண் பார்வை சீராகவில்லை. அது மேலும் மங்கியது.
இதனால், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு சுரேகாவை அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேகாவிற்கு பார்வை முழுமையாகப் பறிபோய்விட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக பல கண் மருத்துவமனைகளில் காட்டியும் சுரேகாவுக்கு பார்வை வரவில்லை. இதனால் அவரது படிப்பும் நின்றுபோய்விட்டது.
இந் நிலையில் நேற்று மகள் சுரேகா, மனைவி கலாவதியுடன் தேவநேதிரன் சென்னை தலைமைச் செயலகம் வந்தார். அங்கு அரசு அதிகாரிகளை சந்தித்து, மகளின் சிகிச்சைக்கு உதவி கோரி மனு கொடுக்க காத்திருந்தார்.
ஆனால், சட்டசபை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதாகக் கூறி அவரை எந்த அதிகாரியும் சந்திக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டனர்.
காலாவதியான மாத்திரையால் சுரேகாவின் கண் பார்வை பறிபோயிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தச் சிறுமிக்கு தமிழக அரசு உதவுமா?












Click it and Unblock the Notifications