காங். கைவிட்டது: பாஜகவிடம் மன்னிப்பு கேட்கும் சிபு சோரன்!
டெல்லி: மக்களவையில் பாஜக கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரனை காங்கிரஸ் கைவிட்டுவிட்டது.
மேலும் சோரன் அரசுக்கு பாஜகவும் தனது ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதால், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளார் சிபு.
இதையடுத்து மீண்டும் தனது மகன் மூலம் பாஜகவுடனே சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்.
பெட்ரோல், டீசல், விலை உயர்வை எதிர்த்து மக்களவையில் பாஜக கொண்டு வந்த வெட்டுத் தீர்மானம் மீது வாக்கெடுப்பில் திடீரென கலந்து கொண்ட சிபு சோரன் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இது அவரது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன்தான் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் உள்ளது. சோரன் இன்னும் மக்களவை உறுப்பினராகவே உள்ளார். இன்னும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படவி்ல்லை.
இந் நிலையில் சோரனின் செயலால் கடுப்பான பாஜக ஜார்க்கண்டில் அவரது ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்றது.
காங்கிரஸ் மற்றும் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சோ ஆகிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து புதிய ஆட்சி அமைக்க திட்டமிட்டு தான் பாஜகவுக்கு எதிராக சிபு சோரன் செயல்பட்டார்.
மராண்டிக்கு முதல்வர் பதவியும், தனது மகன் ஹேமந்துக்கு துணை முதல்வர் பதவியும், தனக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவியும் தந்தால் போதும் என்று காங்கிரசிடம் பேசினார்.
இதில் தனக்கு எந்த லாபமும் இல்லை என்பதை உணர்ந்த காங்கிரஸ், சிபு சோரன் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும் வரை மெளனமாக இருந்துவிட்டு, நேற்று மாலை அவரது திட்டத்தை ஏற்க முடியாது என்று கூறிவிட்டது.
ஆதரவு வேண்டுமானால் முதல்வர் தங்களுக்குத் தர வேண்டும் என்று காங்கிரஸ் கூறிவிட்டது.
இல்லாவிட்டால், பெரும்பான்மையை இழந்துவிட்ட சோரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கத் தயார் என்றும் கூறிவிட்டது.
இதனால் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள சிபு சோரன் மீண்டும் பாஜகவிடமே சரணடைந்துள்ளார். சோரனுக்கு ஆதரவை நேற்று வாபஸ் பெற்ற பாஜக இன்று அது தொடர்பாக ஆளுநரை சந்தித்து கடிதம் தர திட்டமிட்டது.
இந் நிலையில் பாஜகவிடம் மீண்டும் சமாதானப் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார் சிபு சோரன். ஆட்சியை காக்க முதல்வர் பதவியை பாஜகவுக்கே விட்டுத் தரவும் தயார் என்றும் கூறியுள்ளார்.
இது தொடபர்பாக சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன், பாஜக தலைவர் நிதின் கட்கரியை நேற்றிரவு சந்தித்து தனது தந்தை வெட்டுத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதற்குப் பதிலாக தவறுதலாக எதிர்த்து வாக்களித்துவிட்டதாக 'விளக்கம்' தந்தார். ஆனால், அதை இதைக் கேட்டு பாஜக தலைவர்கள் சிரித்துவிட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், பாஜக ஆட்சிப் பொறுப்பை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளட்டும். பாஜக விரும்பினால் எனது தந்தை உடனடியாக பதவி விலகி விடுவார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் எனது தந்தை பெரும் தவறு செய்து விட்டார் என்றார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 82. இதில் சோரன் கட்சிக்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவுக்கு 18 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்களும், மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சிக்கு 11 உறுப்பினர்களும், ஏஎஸ்ஜேயு கட்சிக்கு 5 உறுப்பினர்களும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 உறுப்பினர்களும் உள்ளனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் 6 சுயேச்சை உறுப்பினர்களும் உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் 2000வது ஆண்டில் உருவாக்கப்பட்டது. 10 ஆண்டுகளில் 7வது முறையாக புதிய அமைச்சரவை அமைய உள்ளது. இந்த மாநிலத்தில் சிபு சோரன் மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications