ஐஜி ஏ.கே.விஸ்வநாதன் மீதான லஞ்ச ஒழிப்பு விசாரணைக்குத் தடை
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீது நடத்திய தாக்குதல் வழக்கில் இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஐஜி ஏ.கே.விஸ்வாதன் மீதான லஞ்ச ஒழிப்புப் போலீஸ் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னதாக இதுதொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள்-போலீசார் இடையே நடந்த மோதல் தொடர்பாக நடந்த உண்மைகளை மனுவாக தாக்கல் செய்தேன்.
இதையடுத்து தமிழ்நாடு தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோர் தலைமையில் 29.8.2009 அன்று நடந்த கமிட்டி கூட்டத்தில் எனக்கு எதிராக ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்ற சம்பவத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை பாதுகாப்பதற்காக எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விசாரணையை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் உயர்நீதிமன்றத்தில் உண்மையை தெரிவித்ததற்காக எனது மதிப்பை குறைக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை முழுவதும் மர்மமாக உள்ளது. இதில் போலீஸ் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
எனவே எனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரும், டி.எஸ்.பி.யும் விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார்,
இந்த வழக்கில் விசாரணை நடத்த யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகுதான் இதுபற்றி முடிவு எடுக்க முடியும்.
இந்த வழக்கில் இடைக்கால தடை விதிப்பதற்கான ஆரம்ப முகாந்திரம் உள்ளது. எனவே, ஐ.ஜி. ஏ.கே.விசுவநாதன் மீதான வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க 12-5-10 வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத் தாக்குதல் நடந்தபோது விஸ்வநாதன் கூடுதல் ஆணையராக இருந்தார். இதுதொடர்பான வழக்கில் அவர் அப்போது ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கூறி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், மன்னிப்பும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications