ரவுடிகள் தாக்கி வக்கீல் படுகொலை- ஒருநாள் ஸ்டிரைக்கில் குதிக்கும் வக்கீல்கள்
சென்னை: வக்கீல்கள் தொடர்ந்து ரவுடிகளால் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில வக்கீல்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பூந்தமல்லி கோர்ட்டுக்கு வெடிகுண்டு வழக்கு தொடர்பாக வந்திருந்த பிரபல ரவுடி சின்னா என்கிற சின்ன கேசவலு ஒரு ரவுடிக் கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். அப்போது அதைத் தடுக்க முயன்ற சின்னாவின் வக்கீல் பகத்சிங்கும் படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு வக்கீல்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வக்கீல்கள் தொடர்ந்து வக்கீல்களால் கொல்லப்பட்டு வரும் நிலையில் அதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், சாத்தூரில் ஒரு ஏட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி ஒருவரை உடனடியாக போலீஸார் என்கவுண்ட்ர் செய்து விட்டனர். ஆனால் வக்கீல்கள் சிலரை படுகொலை செய்த ரவுடிகளைப் பிடிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நாளை ஒருநாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதனை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் சுமார் 80 ஆயிரம் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications