ஒரு வருடமாக ஸ்டாக் வைக்கப்பட்டு விற்கப்பட்ட இறைச்சி பார்சல் பறிமுதல்
சென்னை: கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்ட இறைச்சி பாக்கெட்களை விற்று வந்த சூப்பர்மார்க்கெட்டில் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி அவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
காலாவதியான மருந்து, மாத்திரை விற்பனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்துள்ளநிலையில், தற்போது காலாவதியான உணவுகள் பரபரப்பை கிளப்பி வருகின்றன.
தமிழகம் முழுவதும் காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்டுகளில், சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர். சென்னை மாநகராட்சியில் நேற்று 10 மண்டலங்களில் சோதனை நடத்தப்பட்டது. கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், அண்ணாநகர், அயனாவரம், பெரம்பூர், தண்டையார்பேட்டை, சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான காலாவதி உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மளிகை பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் குவியல் குவியலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதி உணவுப் பொருட்களை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நூடுல்ஸ், மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, சாக்லெட், ரெடிமேட் இட்லி, தோசை மாவு, பரோட்டோ, சப்பாத்தி மாவு ஆகியவை மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன.
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் போன்றவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து பதப்படுத்தி விற்பனை செய்வார்கள்.
வசதி படைத்த பலர், இதைத்தான் வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுவார்கள். இந்த அசைவ உணவு வகைகள் ஓராண்டுக்கு மேல் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம் கூறுகையில்,
காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும். பொதுமக்கள், பொருட்களை வாங்கும்போது, காலாவதியான தேதியை பார்த்துதான் வாங்க வேண்டும்.
இது தொடர்பாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். கடைகளில் போர்டுகள் வைக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
இன்றும் சோதனை:
இந்த நிலையில் இன்றும் சென்னையின் பல இடங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் சோதனை நடந்த்து.
கிருஷ்ணகிரியில் பழக் கடைகள், பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது போலியான மற்றும் கலப்பட காபி, டீத்தூள், மசாலா பொருட்கள் ஆகியவை சிக்கின.
இதேபோல ஓசூரிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் வேட்டை:
இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.
மதுரையில் கெட்டுப்போன புரோட்டா விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது. ஊழியர், சப்ளையர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 4-வது நாளாக ஓட்டல்களில் சோதனை நடந்து வருகிறது.
பெரியகுளத்தில் வருவாய் கோட்டாட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் கடை வீதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மளிகை கடைகளில் உணவு பொருள் பாக்கெட்டுகள் சரிபார்க்கப்பட்டன. இந்த சோதனையில் காலாவதியான மசால் பொடி, மல்லி பொடி, மிட்டாய் பாக்கெட்டுகள் மற்றும் நெய் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
கம்பம் நகராட்சி எல்லைக்குட்பட்ட உணவகங்களில் நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஓட்டல்களில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த இட்லி, புரோட்டா, சிக்கன் மட்டன் வகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பல ஓட்டல்களில் முன்தினம் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பூஞ்சை பிடித்த உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். அதே போல் மாலை நேர ஓட்டல்களிலும் சோதனை நடத்தப்பட்டு காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுற்றுலா தலமான கொடைக்கானல் நகரில் பல்வேறு ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஓட்டல்களில் விலைபட்டியல் எழுதி வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன் காலாவதியான உணவு பொருட்கள் பயன்படுத்துவதை கண்டறிந்தால் ஓட்டல் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
கடலூர் நகரில் உள்ள மளிகை கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் உணவு ஆய்வாளர்கள் குழுவினர் நேற்று கடலூர் நகரில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், கேன்டீன்கள், ஆவின் பாலகம் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின்போது, மஞ்சக்குப்பத்தில் உள்ள மளிகை கடையில் இருந்த காலாவதியான நூடுல்ஸ் பொட்டலங்கள், வடகங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் மற்ற மளிகைக்கடைக்காரர்கள் சோதனைக்கு பயந்து கடைகளை அடைத்தனர்.
திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் சில மளிகை கடைகளில் இருந்து காலாவதியான வனஸ்பதி, நூடுல்ஸ், மசாலா சாமான்கள் கைப்பற்றப்பட்டன.
திருப்பாதிரிப்புலியூரில் புதிதாக ஒரு ஓட்டல் நகராட்சி உரிமம் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்து, உடனடியாக உரிமம் வாங்குமாறு எச்சரித்தனர். செஞ்சியில் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மளிகை கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் காலாவதியான பொருட்கள் குறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காலாவதியான மற்றும் தேதிகுறிப் பிடப்படாமல் இருந்த சுமார் 100 பாக்கெட் வனஸ்பதி, 100 ஊறுகாய் பாக்கெட்டுகள், ரஸ்னா, மோர் மற்றும் ஆயில் ஆகியவைகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் பகுதியில் உள்ள மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகள், ஓட்டல்களில், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர்கள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு கடைகளில் டீத்தூள், மசாலா பாக்கெட், நெய், தண்ணீர் பாக்கெட், ரஸ்னா, உள்ளிட்ட உணவு பண்டங்கள் மாதிரி எடுத்து காலாவதி தேதி, தயாரிப்பு தேதி குறித்து சோதனை நடத்தினர்.
அதில் ரூ,2000 மதிப்புள்ள காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். நாமக்கல் ஒன்றிய பகுதிகளான நல்லிபாளையம், கொசவம்பட்டி, பெரியப்பட்டி, கீரம்பூர் பகுதியில் உள்ள மளிகை கடை, ஓட்டல், பேக்கரி, டீ கடைகளில் உணவு பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராசிபுரத்தில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்கள் மற்றும் மளிகை கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் காலாவதியான எண்ணை வகைகள், மசாலா வகைகள், பழ வகைகள், உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். அதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் ஆகும்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சித்தோடு பகுதியில் உள்ள 15 மளிகை கடைகள், ஓட்டல்கள், தேனீர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் காலாவதியான டீத்தூள், நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள், சேமியா, குழந்தைகளுக்கு கொடுக்கும் பிஸ்கட் ஆகியவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ரூ. 5 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் வீரப்பன்சத்திரம் நகராட்சி பகுதியில் உள்ள மளிகைக்கடை, டீக்கடை, ஓட்டல்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். டீக்கடை ஆய்வின் போது சுகாதாரம் இல்லாமல் பஜ்ஜி பொரிக்க வைத்திருந்த எண்ணையை ரோட்டில் கொட்டினர்.
மேலும் அந்த எண்ணையில் வேக வைத்த போண்டா, பஜ்ஜி போன்ற உணவு பொருட்களை கைப்பற்றி அழித்தனர். கோவையில் உக்கடம், சத்திரோடு, அவினாசிரோடு, திருச்சிரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் 50-க் கும் மேலான கடை மற்றும் ஓட்டல்கள், பேக்கரி கடைகளில் சோதனை நடத் தப்பட்டது.
இந்த சோதனையில் மிளகாய்த்தூள், மிளகாய் வத்தல் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
சில கடைகளில் வைக்கப்பட்டு இருந்த பிரபல கம்பெனிகளின் குளிர்பான பாட்டில்களில், போலியாக தயாரிக்கப்பட்ட குளிர்பானத்தை அடைத்து விற்பனை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் 500 கிலோ எடை உள்ள காலா வதியான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறித்த விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் பிரபல கம்பெனி பெயரை பயன்படுத்தி குளிர்பானம் தயாரித்த ஸ்டாலின் (39) என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை செய்யாறு மற்றும் ஆரணி பகுதியில் உள்ள மளிகை கடையில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பெரும்பாலான கடைகளில் அதிகளவில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்துவிட்டு காலாவதியான உணவு பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications