சேலத்தில் வெள்ளி வியாபாரி மகன் கடத்தல் – பத்திரமாக மீட்ட போலீஸ்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: சேலத்தில் வெள்ளி நகை வியாபாரியின் மகனை ஒரு கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது. அக்கும்பலை போலீஸார் திறமையாக மடக்கிப் பிடித்தனர்.

சேலம் ஜங்ஷன் அருகில் உள்ளது சேலத்தாம்பட்டி. இங்கு வசித்து வருபவர் சிவாஜி (48). மகாராஷ்டிர மாநிலம் சாங்க்லி என்ற ஊரை சேர்ந்த இவர், 30 வருடமாக சேலத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் கல்பனா. இவர்களுக்கு ரோகித் (14) என்ற மகன் உள்பட 4 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் அனைவரும் சொந்த ஊரான சாங்க்லியில் படித்து வருகிறார்கள்.

வெள்ளிப்பட்டறை அதிபர் சிவாஜி சேலம் அருகே உள்ள அரியாக்கவுண்டம்பட்டியில் வெள்ளிகட்டிகளை உருக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

சிவாஜியின் மகன் ரோகித்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால் இவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் வந்தான். 8-ம் வகுப்பு படித்து வந்த இவன் தினமும் பகல் நேரத்தில் தனது தந்தை சிவாஜியின் வெள்ளி உருக்கும் நிறுவனத்திற்கு சென்று வந்தான்.

இதுபோல் நேற்று பகலில் ரோகித் வெள்ளி உருக்கும் இடத்திற்கு சென்றான். பின்னர் இரவு 7மணி அளவில் மொபட்டில் வீட்டிற்கு திரும்பினான்

அப்போது சேலத்தாம்பட்டி ஓடைப்பகுதியில் ஒருவன் ரோகித்தின் மொபட்டை வழிமறித்து லிப்ட் கேட்டான். ரோகித்தும் அந்த வாலிபரை மொபட்டில் ஏற்றிக்கொண்டு சூரமங்கலம் வந்தான்.

சிறிது தூரத்தில் 4 வாலிபர்கள் ரோகித் மொபட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அவனை கத்தி முனையில் கடத்தி செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகித் சத்தம் போட்டான். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள் கத்தியை ரோகித்தின் கழுத்தில் வைத்து சத்தம்போட்டால் கொன்று விடுவோம் என மிரட்டி அவனை அங்குள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று பூட்டி வைத்தனர்.

பிறகு ரோகித்திடம் அவனது தந்தை சிவாஜியின் செல்போன் எண்ணை வாங்கி, உங்களது மகனை கடத்தி வந்து விட்டோம். அவன் உயிருடன் வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் பணம் உடனே தேவை. பணம் எங்கு கொண்டு வந்து தருவது என்ற விவரத்தை பிறகு சொல்கிறோம் என கூறி செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டான்.

இதனால் சிவாஜி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுபற்றி யாரிடமும் கூறாமல் மீண்டும் செல்போன் வருகிறதா? என எதிர்பார்த்து காத்து இருந்தார். இந்த நிலையில் இரவு 11.30மணிக்கு செல்போன் மீண்டும் வந்தது. இதில் பேசிய ஆசாமிகள், பணம் ரெடியா? உடனே பணத்தை எடுத்து கொண்டு இளம்பிள்ளை பை-பாஸ் பகுதிக்கு வரவும். போலீசுக்கு போனால் உன் மகனை கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டினார்கள்.

இதனால் பயந்துபோன சிவாஜி, நான் போலீசிடம் போகவில்லை. இதுபற்றி வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன், எனது மகன் உயிருடன் வேண்டும். அவனை ஒன்றும் செய்து விடாதீர்கள். தற்போது பணம் ரூ. 2லட்சம் தான் இருக்கிறது. இதை கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். எனது பையனை விட்டு விடுங்கள் என்று அவர்களிடம் கெஞ்சினார்.

ஆனால் மர்ம ஆசாமிகள் ரூ.2லட்சம் பணம் எங்களுக்கு தேவை இல்லை. ரூ.5லட்சம் தான் வேண்டும். பணத்தை உடனே ரெடி செய். இல்லையெனில் உன் மகன் அவ்வளவு தான் என கூறி, ரோகித்தின் கையில் பிளேடால் கிழித்தனர். இதனால் அவன் சத்தம் போட்டு அழுதான். இதை கேட்டு சிவாஜி, தனது மகனை ஒன்றும் செய்து விடவேண்டாம். பணம் ரெடி செய்து விடுகிறேன் என கூறினார்.

பின்னர் சிவாஜி மர்ம ஆசாமிகளை போலீசில் எப்படியும் பிடித்து கொடுத்து விடவேண்டும் என முடிவு செய்து இது பற்றி சேலம் போலீஸ் கமிஷனரும், ஐ.ஜியுமான சுனில் குமார் சிங்கிடம் தெரிவித்தார்.

உடனே அவரது உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஜான்நிக்கல்சன் தலைமையில் சிறுவனை மீட்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலீசார் ரோகித்தின் தந்தை போல் சேலத்தாம்பட்டியை சேர்ந்த பொன்மலை என்பவரை மர்ம ஆசாமிகளுடன் பேச வைத்தனர்.

அப்போது அவர் மர்ம ஆசாமிகளிடம் ரூ.5லட்சம் பணம் ரெடி, எங்கு வந்து பணத்தை தருவது என பொன்மலை கேட்டார்.

போனில் பேசியது சிவாஜித்தான் என நினைத்து மர்ம ஆசாமிகள் தளவாய்பட்டி பள்ளி பின்புறம் உள்ள சுடுகாடு பகுதிக்கு ரூ. 5லட்சம் பணத்துடன் வருமாறு கூறினர்.

அவர்கள் கூறியபடி அந்த இடத்திற்கு நள்ளிரவில் தனிப்படை போலீசாரும், பொன்மலையும் சென்றனர்.

சுடுகாட்டு பகுதி இருட்டாக இருந்தது. அங்கு சென்ற பின்னர் போலீசாரும், பொது மக்கள் சிலரும் செடிகொடி, மரங்கள் பின்னால் மறைந்து நின்று காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் மர்ம ஆசாமிகள் பொன்மலைக்கு போன்செய்து, பணத்துடன் வந்து விட்டீர்களா? போலீசுக்கு சொல்லவில்லையே? போலீசுக்கு தெரிந்தால் உங்கள் மகன் சாவது உறுதி என கூறினர்.

அதற்கு அவர், தான் மட்டும் பணத்துடன் வந்து காத்திருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் போன் வர வில்லை. போலீசாரும், பணத்துடன் சென்ற பொன்மலையும் இருட்டில் விடிய விடிய காத்திருந்தனர்.

இன்று அதிகாலை 4மணி அளவில் மர்ம ஆசாமிகள் ஒவ்வொருவராக சுடுகாட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களுடன் சிறுவன் ரோகித்தும் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தான்.

இவர்கள் பொன்மலையை பார்த்து பணம் ரெடியா, என கேட்டனர். இதற்கு அவர் பணப்பையை தூக்கி காட்டினார். இதனால் மர்ம ஆசாமிகள் அவரிடம் வந்து பணப்பையை வாங்கிக் கொண்டு சிறுவனை விட்டனர்.

அப்போது மறைந்து இருந்த போலீசாரும், பொதுமக்களும் மர்ம ஆசாமிகள் 5பேரை சூழ்ந்து கொண்டனர்.

இதனால் உஷாரான 5 மர்ம ஆசாமிகள் தப்பி ஓட முயன்றனர். இவர்களில் சேலத்தாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (19), ராஜூ (23), பெரிய கவுண்டம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (20) மற்றும் சிவப்பிரகாசம், ஏழுமலை ஆகிய 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

போலீசார் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

மர்ம ஆசாமிகள் கத்தியால் குத்தியதால் ரோகித்துக்கு கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தபடி இருந்தது. உடனே போலீசார் அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

பிடிபட்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+