'சொத்து வழக்கை இழுத்தடிக்க சட்டத்தின் சந்து பொந்துகளில் ஜெயலலிதா'- கருணாநிதி!

முரசொலியில் தனது கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்:
முன்னாள் முதல்வர், இந்நாள் எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாகச் சொல்லிக் கொண்டு 1-7-1991 முதல் 30-4-1996 வரை ஆட்சி செய்த காலத்தில் சுமார் 66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களைக் குவித்ததாக 5-7-1997ல் வழக்கு ஒன்று தாக்கல் செய்தது.
வழக்கு தொடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் வழக்கு ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு ஏற்படவில்லை. இதற்குள் தமிழகத்தில் மூன்று முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
இந்த வழக்கு வரலாறு காணாத வகையில் 13 ஆண்டுகளாக; சட்ட நிபுணர்களே கூட எதிர்பார்க்காத அளவிற்கு இழுத்தடிக்கப்படுவது பற்றிய சில விவரங்களை இங்கே தொகுத்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.
1997ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் 259 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின்போது ஜெயலலிதா தரப்பில் சிறிதும் ஒத்துழைக்காமல் எந்த அளவிற்குத் தாமதம் ஏற்படுத்திட முடியுமோ- அந்த அளவிற்கு தாமதம் ஏற்படுத்தப்பட்டது.
வழக்கு விசாரணை தாமதப்பட்டு வந்த நிலையில் 2001ம் ஆண்டு மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு- ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் வழக்கின் போக்கில் அதிர்ச்சி தரத்தக்க மாற்றமும், பின்னடைவும் ஏற்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றப்பட்டார். அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டனர்.
ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 76 சாட்சிகள் மீண்டும் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்தான் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சட்டத்தின்படி நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
28-2-2003 அன்று உச்ச நீதிமன்றம்- சென்னை சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. 18-11-2003 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என். வரியவா, எச்.கே. சேமா ஆகியோர் அளித்த தீர்ப்பில்- அன்பழகனின் கோரிக்கையை ஏற்று- சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து இந்த வழக்கினை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த அந்த தீர்ப்பில் சில வாசகங்கள் இன்றும் நினைவிலே கொள்ள வேண்டியதாகும்.
"எங்களின் கருத்தின்படி; மனுதாரர் (க.அன்பழகன்) நியாயப்பூர்வமான, கருத்தில் கொள்ளத்தக்க சந்தேகங்களை எழுப்பி, அதாவது நீதி திசை திருப்பியும், பாரபட்சமாகவும் செல்வதால் எங்களுடைய குறுக்கீடு அவசியம் தேவை என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தெரிவித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றிட வேண்டுமென்று நமது அன்பழகன் வைத்த வேண்டுகோள் மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ள கருத்துக்கள் யாவை?.
1. ஜெயலலிதா தலைமையிலான அரசு; 1997ன் சி.சி. எண். 7 வழக்கில் தீய நோக்கத்தோடு, வேண்டுமென்றே அரசு வழக்கறிஞரின் உதவியோடு நேர்மையான சுதந்திரமான விசாரணையை குலைப்பதற்காக தலையிட்டுள்ளது.
2. தங்கள் முந்திய வாக்குமூலங்களை மாற்றிக் கூறிய சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவோ, மறு விசாரணை செய்யவோ முயற்சிக்காமல் அரசு வழக்கறிஞர் கடமையில் இருந்து தவறியிருப்பது, அரசு வழக்கறிஞர் துறை, ஜெயலலிதா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கு வழியமைத்துக்கொடுக்க ரகசியமாக முடிவு செய்து செயல்பட்டுள்ளது. இதன்மூலம் நீதி நிர்வாகத்தில் தலையிட்டுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது.
3. ஜெயலலிதா சென்னையிலேயே இருக்கும் பொழுது இந்திய குற்றவியல் சட்டம் 313-வது பிரிவின்கீழ் அவர் நேரில் ஆஜராகாமல் இருப்பதற்கு அரசு வழக்கறிஞர் ஒப்புதல் அளித்திருப்பது, அரசு வழக்கறிஞர் சுதந்திரமாக செயல்படவில்லை; முதல் குற்றவாளியான செல்வி ஜெயலலிதாவின் விருப்பப்படியே செயல்படுகிறார் என்பதைத் தெரிவிக்கிறது.
4. 1997ன் சி.சி. எண். 7 வழக்கில் ஜெயலலிதாவின் சட்ட விரோதத் தலையீடும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அரசு வழக்கறிஞர் சட்ட விரோத உதவியளித்ததும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவையும், இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 313வது பிரிவையும் மீறிய செயலாகும். எல்லாவற்றையும் விட, இது குற்றவியல் நீதி முறையைக் குலைக்க மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியாகும்.
இவ்வாறெல்லாம் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்- வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசு பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்- ஆறு வாரத்தில் இப்பணிகள் முடிக்கப்பட வேண்டும்- அதன் பிறகு அன்றாடம் விசாரணை நடைபெற வேண்டும்- இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விசாரணையின்போது சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராக வேண்டும். முதல்வராக இருந்தாலும், யாராக இருந்தாலும் நீதிமன்றத்தின் முன் அனைவரும் சமமே.
இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை. அதை அப்படியே உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது. எனவே இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இவ்வாறு 2003ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்ட பிறகு ஏழு ஆண்டுகளாகி விட்டன. இருந்தும் இன்னமும் வழக்கு முடிந்தபாடில்லை. ஒரு சிறிய குற்றத்தைச் செய்பவர் தொடர்பான வழக்கிலே கூட- உடனடியாக விசாரித்து- அப்போதே தண்டனை வழங்கப்படுவதை பார்க்கிறோம்.
ஆனால், கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த ஊழல் வழக்கில் 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசு பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்- ஆறு வாரத்தில் இப்பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு கூறிய பிறகும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை வழக்கு ஆவணங்கள் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்திற்கு அப்போதிருந்த அதிமுக அரசினால் ஒப்படைக்கப்படவே இல்லை.
அதற்குப் பிறகு ஜெயலலிதா உட்பட ஐந்து பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பெங்களூர் தனி நீதி மன்றத்தில் விசாரணை தொடங்கிய போதிலும் நான்கு முறை ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஜெயலலிதா தரப்பில் ஒரு மாதம் அவகாசம் கேட்டார்கள். அதற்கு நீதிபதி பச்சாபுரே அவகாசம் தராமல், 18-4-2005க்கு வழக்கை ஒத்திவைத்தார்.
18ம் தேதியன்றும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஆஜராகவில்லை. ஜெயலலிதாவின் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. மூத்த வழக்கறிஞரின் உதவியாளர், மூத்த வழக்கறிஞர் உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையிலே இருப்பதாகக் கூறினார்.
"அவர் வராமல் போகட்டும், குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் எங்கே? குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் இருப்பதை வைத்தே தீர்ப்பு வழங்கி விடுவேன்'' என்றார் நீதிபதி.
இறுதியாக விசாரணையை 2005ம் ஆண்டு மே 9ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்று ஜெயலலிதா, சசிகலா உட்பட அனைவரும் கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். 9-5-2005 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீண்ட நாள் அவகாசம் கேட்டார்.
அப்போது ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி பச்சாபுரே கடும் கோபமடைந்தார்.
"வருகிற 16ம தேதி இறுதி அவகாசம் தருகிறேன், அதற்கு மேல் அவகாசம் தர மாட்டேன். அன்று ஜெயலலிதா, சசிகலா உட்பட ஐந்து பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். நீண்ட அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. வழக்கை தினந்தோறும் நடத்தவுள்ளேன். இப்படி அடிக்கடி வாய்தா கேட்டால் எப்படி வழக்கை விரைவாக நடத்துவது, (ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தனக்கு வேறு நீதிமன்றங்களில் பணியிருப்பதாகக் கூறினார்) உங்களுக்கு பல கோர்ட்டுகளில் வேலை இருக்கும். உங்கள் ஒருவருக்காக இந்த வழக்கை தள்ளி வைக்க முடியுமா? இது நியாயமற்றது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இப்படி அடிக்கடி அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இரண்டரை ஆண்டுகளாக வழக்கை வாய்தா கேட்டு இழுத்தடித்து விட்டு தற்போது மீண்டும் வாய்தா கேட்பது சரிதானா?. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விரைவாக நடத்த வேண்டுமென்று எனக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆறு மாதமாக இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை. நான் தனியாக கடந்த ஆறு மாதமாக உட்கார்ந்து வருகிறேன். தனி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது போல உள்ளேன்'' என்றார்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் வேண்டுமென்றே வழக்கைத் தாமதப்படுத்துவது கண்டு நீதிபதி கடுங்கோபமடைந்து தனது கோபத்தை, சாதாரணமானவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தியும் கூட, 16ம் தேதியன்றும் யாரும் ஆஜராகவில்லை
மீண்டும் 3 வாரம் வாய்தாவிற்கு நேரம் கொடுக்க மறுத்து நீதிபதி விசாரணையை வருகிற அந்த ஆண்டு மே 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அப்போதும் ஜெயலலிதா வரவில்லை. அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி வழக்கை மீண்டும் தள்ளி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.
இவ்வாறு வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்த ஜெயலலிதா குழுவினர் பின்பற்றிய அனைத்து வகை உத்திகளுக்குப் பின்னர் தற்போது 25-2-2010 அன்று முதல் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு மேல் விசாரணை தொடங்கியிருக்கிறது.
கடந்த 13 ஆண்டுகளாக இந்த வழக்கிலே பல முயற்சிகளின் வாயிலாக வாய்தா வாங்க முயன்ற ஜெயலலிதா- தற்போதும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் இந்த விசாரணை தொடராமல் இருக்க- ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தைக் கண்டுபிடித்துக் காட்டி அதன் அடிப்படையில், பல்வேறு மனுக்களை சிறப்பு நீதிமன்றத்திலும், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்து வருவதை கடந்த இரண்டு மாத கால செய்திகளின் மூலமாக நாட்டு மக்களே நன்கறிவார்கள்.
உச்ச நீதிமன்றத்தி்ல் ஜெயலலிதா சார்பில் இப்போது தாக்கல் செய்த மனு கூட நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு 66 கோடி ரூபாய் குவித்ததற்கான வழக்கு- அப்போது 66 கோடி ரூபாய் என்றால் தற்போது எத்தனை கோடி ரூபாய் சொத்து என்பதைச் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.
கட்சிக்காரர்களை நினைத்த படி ஏமாற்றலாம்- மக்களை ஓரளவு ஏமாற்றலாம்- கட்சிக்காரர்களும் ஏமாந்து போய்; மக்களை ஏமாற்ற முனையலாம்- சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து கொண்டு நீதியை தாமதப்படுத்தலாமே தவிர நிரந்தரமாகத் தவிர்த்திடவோ, ஏமாற்றிடவோ முடியாது என்பதை காலம்தான் உணர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications