சங்கரன் கோவில் அருகே கோவில் விழாவில் போலீஸ் மீது தாக்குதல்
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தில் உடையார்நாயகி அம்மன் கோவில் விழாவில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2 நாட்கள் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் அம்மனுக்கு அபிசேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு கோயிலின் எதிரே அமைந்துள்ள திடலில் இன்னிசை கச்சேரி நடந்தது. கிராம மக்கள் அனைவரும் கூடி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது கோயிலின் அருகே உள்ள மெயின் ரோட்டில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், சேகர், ராமமூர்த்தி, வேல்முருகன் ஆகியோர் தங்களது பைக்கை நடுரோட்டில் நிறுத்தி அதன் மீது அமர்ந்து கச்சேரியை ரசித்து கொண்டிருந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கரிவலம்வந்தநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன் குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவர்களை பைக்கை ஓரமாக நிறுத்தும்படி கூறினர். அதற்கு அந்த 4 பேரும் எங்கள் ஊரில் அப்படிதான் நிறுத்துவோம், உங்களை யார் இங்கு வர சொன்னது என தகராறு செய்தனர்.
இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரும் போலீசாரை சராமரியாக தாக்கி கீழே தள்ளினர். இதை தொடர்ந்து போலீசார் அந்த 4 பேரையும் பிடித்து ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு செல்ல முயன்றனர்.
இதை பார்த்த கிராம மக்கள் போலீஸ் ஜீப்பை முற்றுகையிட்டு அவர்களை காவல் நிலையம் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கீழே அமர்ந்தும் போலீஸ் ஜீப்பை மறித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சங்கரன்கோவில் டிஎஸ்பி சண்முகம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அவர்களிடம் கிராம மக்கள் வாக்குவாதம் செய்து ஜீப்பை மறித்தனர். மேலும் போலீசார் மீது சராமரியாக கற்களை வீசி தாக்கினர். இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பிறகு ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரும் ஜீப்பி்ல் ஏற்றப்பட்டு காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர்.
போலீசாருக்கும், பொது மக்களும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இன்னிசை கச்சேரி பாதியி்ல் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜூன் குமார் கொடுத்த புகாரின் பேரில் கரிவலம் வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் விசாரணை நடத்தி ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
சுப்புலாபுரம் கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
