''சிறுதாவூர் நிலத்துக்காக தாசில்தாரையே மாற்றினர்''!
சென்னை: சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள பரணி ரிசார்ட்ஸ் நிறுவனம் சிறுதாவூர் நிலத்தை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பட்டாவை பெற்றிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இதற்காகவே, தூத்துக்குடியில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு எம்.தியாகராஜன் என்ற தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டார் என்று நீதிபதி சிவசுப்பிரமணியன் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுகாவில் உள்ள சிறுதாவூர் கிராமத்தில் ஜெயலலிதா அடிக்கடி தங்கி ஓய்வெடுக்கும் பங்களா உள்ளது. அந்த பங்களா அமைந்துள்ள இடம் தலித்துகளுக்கான பஞ்சமி நிலம் என்பதால் அதை மீட்க கோரிக்கை விடப்பட்டது.
இது குறித்து விசாரித்த நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் கமிஷன் அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு்ள்ளதாவது:
கடந்த 1967ம் ஆண்டில், மத்திய அரசு திட்டத்தின் கீழ், சிறுதாவூர் கிராமத்தில் உள்ள 20 நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2.50 ஏக்கர் நிலம் இலவசமாக அளிக்கப்பட்டது. நிலம் வழங்கப்பட்ட திட்டத்தின் கீழ், நிலத்தை பெற்றவர்கள் 25 ஆண்டுகளுக்கு அந்த நிலத்தை, யாருக்கும் விற்க முடியாது என்றபோதிலும், 1983ம் ஆண்டில் எஸ்.வி.கோபாலன், கிருஷ்ணமாச்சாரி, சுனில் சட்டநாதன் ஆகியோருக்கு ரூ.8,750க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு, அந்த நிலம் பலரது கைமாறியுள்ளது. இது தொடர்பாக வருவாய் ஆவணங்களிலும் அவ்வப்போதைக்கு பதிவு செய்து வரப்பட்டிருக்கிறது.
நில உரிமையாளர்கள் 1983ல் விற்பனை பத்திரம் உருவாக்கவில்லை என்றும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை என்றும், திருப்போரூரில் உள்ள ஒரு சத்திரத்தில் ஒரு ஆவணத்தில் கையெழுத்து மட்டும் போட்டு நிலத்தை விற்றதாகவும் சொல்லியிருப்பதை ஏற்க முடியாது.
அரசு அளித்த நிலமானது அதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அதை மீறுவது சட்டவிரோதமானது. அரசு சட்டத்தின்படி அந்த நிலத்தை கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. நிலத்தை பெற்றவர்கள், அதை மற்றவர்களுக்கு விற்றிருந்தாலும், அது பல கைகள் மாறியிருப்பினும், அவையெல்லாம் அரசை கட்டுப்படுத்தாது.
நிலத்தை பெற்றவர்களிடம் இருந்து அந்த நிலம் பறிக்கப்படாவிட்டாலும் கூட, அவர்களது ஒப்புதலின் பேரிலேயே நில விற்பனை நடந்துள்ளது. இருந்தாலும் கூட அந்த நிலத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசின் எல்லைக்குட்பட்டே இருக்கிறது. நிலத்தை முதலில் பெற்றவர்களுக்கும், அதற்கு அடுத்ததாக வாங்கியவர்களுக்கும் பட்டா கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட அவை, நிலத்தை கையகப்படுத்தும் அரசின் அதிகாரத்துக்கு தடையை ஏற்படுத்தாது.
நிலத்தை அபகரிப்பதற்காக தாசில்தாரே மாற்றம்:
பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்துக்கு சிறுதாவூரில் பிரச்சனைக்குரிய இடத்தில் நிலம் வாங்கியதற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் வருவாய்த் துறை விதிகளின்படி, விசாரணை எதுவும் நடத்தப்படாமல் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விதிகளுக்கு மாறாக பட்டா வழங்குவதற்காக, தூத்துக்குடியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு தியாகராஜன் என்ற தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கான பணியிடத்தை உருவாக்குவதில் அப்போதைய (அதிமுக) அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எந்த வித புகாரும் வரவில்லை. அதனால், விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. சசிகலாவை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நிலம் அவர் பெயரில் இல்லை. மேலும், பரணி ரிசார்ட்சின் பங்குதாரராகவும் அவர் காட்டப்படவில்லை.
சசிகலா மறுக்கவில்லை:
எனினும், இந்த விவகாரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த பிரச்சனையில் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுத்து அவர் மனுத்தாக்கல் செய்தாலும், அவர் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளிக்கவில்லை. ஆனால், அதில் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு இல்லை என்று அவர் மறுக்கவில்லை.
பதில் சொல்ல அக்கறை காட்டாத சுதாகரன்-இளவரசி:
சம்பந்தப்பட்ட நிலத்தின் பெரும்பகுதியை தன்வசம் வைத்துள்ள பரணி ரிசார்ட்சின் பங்குதாரர்கள் என்.சுதாகரன் மற்றும் இளவரசி ஆவர். அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும் அவர்கள் இருவருமே ஆஜராகவில்லை. பதில் மனுத்தாக்கல் செய்யவும் கூட அவர் அக்கறை காட்டவில்லை.
2005ம் ஆண்டில்தான் நிலத்தை வாங்கினோம் என்றும், 1994ம் ஆண்டில் அந்த நிலம் தங்கள் வசம் இல்லை என்றும் பரணி ரிசார்ட்ஸ் தரப்பில் தவறான தகவலை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பரணி ரிசார்ட்ஸ் தாக்கல் செய்த ஆவணங்களின் மூலமாகவே அந்த நிலம் 1994 முதல் அவர்கள் வசம் இருப்பது தெரிகிறது.
சட்டப்படி அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி, தகுதியுள்ள ஏழை, எஸ்.சி-எஸ்.டி. பிரிவினருக்கு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. தங்கள் வாழ்நாளில் நிலத்தை யாருக்கும் விற்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறி, நிலத்தை அதன் உரிமையாளர்கள் விற்றிருப்பதால் அவர்கள் கருணை காட்ட தகுதி அற்றவர்களாக ஆகிறார்கள் என்று கமிஷன் கருதுகிறது.
அவர்களுக்காக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அவர்கள் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள். அதனால், அந்த நிலத்தை மீண்டும் அவர்களுக்கு ஒதுக்குவது, தவறுசெய்வோருக்கு பலன் அளிப்பது போலாகிவிடும்.
அரசு புறம்போக்கு நிலத்தில் சிறுதாவூர் பங்களா அமைந்துள்ளது கமிஷனின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தாலும், இந்த விஷயத்தை நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் எதிர்கொள்ள பரணி ரிசார்ட்ஸ் உரிமையாளர் சித்ரா தயாராக உள்ளார். இதற்கு அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.
எனவே, ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலம் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த கமிஷன் முடிவு செய்தது. இதர நிலங்களைப் பொருத்தவரையில், நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ் அரசு உரிய நடவடிக்கையை எடுக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்:
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 53 ஏக்கர் நிலத்தை மீட்டு ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், நில நிர்வாக ஆணையரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எனினும், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.
ஒரு ரகசியம் சொல்கிறேன்-கருணாநிதி:
இந்நிலையில் சிறுதாவூர் நில அபகரிப்பு தொடர்பாக நீதிபதி சிவசுப்பிரமணியம் அறிக்கை பற்றி தி.மு.க. தலைவர் என்ற முறையில் உங்கள் கருத்து என்ன? முதலமைச்சர் என்ற முறையில் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என்று கேட்டதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில்,
ஒரு ரகசியம் சொல்கிறேன். அந்த அறிக்கை பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவு வெளிவந்த நேரத்திலேயே வந்து விட்டது. முறைப்படி அதனை பேரவையிலே வைக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது, பென்னாகரம் இடைத்தேர்தலில் அவர்கள் பெரும் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டி, இந்த நேரத்தில் இதையும் அவையிலே வைத்து அவர்களை வருத்தமடையச் செய்யக் கூடாது என்று நான் கூறிவிட்டேன்.
எனினும் இதைப் போன்றதொரு அறிக்கையை அவையிலே வைக்க வேண்டியது அவசியம் என்ற காரணத்தினால்தான், பேரவை முடிகின்ற நேரத்தில் அது அவையிலே வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை மீது என்ன நடவடிக்கை அரசின் சார்பில் எடுப்பது என்பது பற்றி முறைப்படியும், சட்டப்படியும் யோசிக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications