ஜூன் 2ல் தனியார் பள்ளிகள் திறப்பு-கட்டணம் வசூலிக்க மாட்டார்களாம்!
சென்னை: ஜூன் மாதம் 2ம் தேதி அனைத்து தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அந்தப் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய ஆண்டு கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு நிர்ணயித்துள்ளது.
இந்தக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்தது. ஆனால், இந்தக் கட்டணத்தை தனியார் பள்ளி நிர்வாகிகள் ஏற்கவில்லை.
இதை எதிர்த்து சில பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகின. ஆனால், அங்கு தமிழக அரசு நிர்ணயித்த கட்டண உயர்வு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து ஜூன் மாதம் எந்தப் பள்ளியையும் திறக்க மாட்டோம் என மிரட்டல் விடுக்க ஆரம்பித்தனர். இந்த மிரட்டலுக்கு அரசு பணியாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவி்த்தார்.
இந் நிலையில் ஜூன் மாதம் 2ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பில் 10,000 பள்ளிகள் உள்ளதாகவும், ஜூன் மாதத்தில் பள்ளிகளைத் திறக்கும்போது மாணவர்களிடம் எந்தக் கட்டணத்தையும் வாங்க மாட்டோம் என்றும்,
கட்டணத்தை 5 மடங்காக உயர்த்துமாறு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியிடம் கோரிக்கை விடுப்போம் என்றும், அதன் பின்னர் கட்டணத்தை உயர்த்திய பிறகு ஜூலை மாதத்தில் தான் மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிப்போம் என்றும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் ஒவ்வொரு தனியார் பள்ளிக்குமான கட்டண விவரம் பள்ளிக் கல்வித் துறையின் http://www.pallikalvi.in/ இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications