ஜார்க்கண்ட் முதல்வர் பதவி: பாஜக-சிபுசோரன் 'பிப்டி 50'!

அதன்படி இரு கட்சிகளுக்கும் தலா 28 மாதங்கள் முதல்வர் பதவி ஒதுக்கப்படும். முதலில் பாஜக சார்பில் அர்ஜூன் முண்டா முதல்வராகிறார். 28 மாதங்களுக்குப் பின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனுக்கு அந்தப் பதவியை பாஜக விட்டுக் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் அவரது கட்சியைச் சேர்ந்தவர் 28 மாதங்கள் முதல்வராக இருப்பார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின் பாஜக-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை இணைந்து ஆட்சியை அமைத்தன. மாநில முதல்வரானார் சிபு சோரன். ஆனாலும் இன்னும் எம்எல்ஏ ஆகவில்லை, எம்பியாகவே இருந்து வருகிறார்.
இந் நிலையில் சும்மா இருந்த சங்கை ஊதிக் கொடுத்தார் சிபு. மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த வெட்டுத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் திடீரென கலந்து கொண்ட சிபு சோரன் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதன்மூலம் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சராகிவிடவும், ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் தனது மகன் ஹேமந்தை முதல்வராக்கவும் திட்டமிட்டார்.
இதையடுத்து அவரது கூட்டணிக் கட்சியான பாஜக ஆதரவை வாபஸ் பெற்றது. ஆனால், சிபு எதிர்பார்த்து போல அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கிடைக்கவில்லை.
இதையடுத்து பாஜகவிடம் மன்னிப்பு கேட்ட ஹேமந்த், தனது தந்தையை ஹவுஸ் அரெஸ்டில் வைத்துவிட்டு பாஜக தலைமையுடன பேச்சு நடத்தினார்.
இதன்படி முத்லவர் பதவியை இரு தரப்பும் மிச்சமுள்ள ஆட்சி காலத்துக்கு பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதலில் பாஜக முதல்வர் தலைமையில் இந்தக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சி அமைகிறது. பாஜக சார்பில் அர்ஜூன் முண்டா முதல்வராகிறார். இதற்காக வரும் 25ம் தேதி சிபு சோரன் முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறார்.
28 மாதங்களுக்குப் பின் சோரன் கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராவார்.












Click it and Unblock the Notifications