ஈழப் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசு அமைவதே ஒரே தீர்வு- நாம் தமிழர் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அனைத்து துறைகளிலும் தமிழே ஆட்சி மொழி என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாம் தமிழர் இயக்கம் நேற்று முதல் அரசியல் இயக்கமாக உருவெடுக்கிறது. இதற்கான மாநாடு மதுரையில் நடைபெற்றது.

மாநாட்டையொட்டி, காலையில் தெப்பக்குளம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. விரகனூர், ரிங் ரோடு வழியாக மாநாட்டு திடலை பேரணி அடைந்தது. மாலை 5 மணிக்குத் துவங்கிய இப்பேரணி இரவு 7.30 மணிக்குப் பிறகும் தொடர்ந்தது.

பின்னர் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் ஆகியோர் மெழுகுவர்த்தி ஏந்தி மாநாட்டைத் தொடங்கி வைத்தனர்.

பின்னர் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. பாயும் புலியுடன் இந்தக் கொடி அமைந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரின் பெற்றோர் இந்தக் கொடியை ஏற்றி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஈழப் போர்க்களத்தில் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த மக்களுக்கும் போராளிகளுக்கும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்து, சீமான் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதி மொழியை சீமான் படிக்க, தொடர்ந்து கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் அதைத் திருப்பிச் சொன்னார்கள்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் துணைக் கொள்கைகளை நிர்வாகிகள் படித்தனர்.

கொள்கைகள்:

தமிழர் இறையாண்மை மீட்பே நமது வாழ்வின் லட்சியம், ஈழப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி தமிழீழம்தான், தமிழை எங்கும் வாழ வைப்போம், உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் பாடுபடுவோம், மகளிருக்கு சம உரிமை, ஊடகம் மூலம் பரவும் பண்பாட்டுச் சீரழிவுகளைத் தடுப்போம், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட 26 முதன்மைக் கொள்கைகள் மற்றும் துணைக் கொள்கைகளை அறிவித்தனர்,

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இதையடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,

-உலகில் யுத்தம் நடைபெறும் நாடுகள் பற்றி ஆய்வு செய்யும் அமைப்பான சர்வதேச நெருக்கடி ஆய்வுக்குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசை இனப் படுகொலை செய்த அரசாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு அறிவிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

-எண்ணற்ற உயிர் தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் செய்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக தாயக விடுதலைக்காக போராடி வரும் ஈழத்து மக்களுக்கு தனி தமிழ் ஈழம் தவிர வேறு தீர்வு கிடையாது. இதனால், மத்திய அரசு தமிழ் ஈழத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்.

-ஐந்தாறு தலைமுறைகளாக உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் 1.5 லட்சம் குழந்தைகள் உள்ளிட்ட 4.5 லட்சம் மலேசிய தமிழர்களுக்கும் மலேசிய அரசியல் சாசன பிரிவுகளில் கண்டவாறு குடியுரிமை வழங்க மத்திய அரசு மலேசிய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும்.

-இந்தியாவில் வாழும் திபெத்திய அகதிகளுக்கு வழங்கப்படுவது போல அனைத்து உரிமைகளையும் இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். சிறப்பு முகாம் என்ற பெயரில் நடத்தும் அனைத்தும் முகாம்களையும் கலைத்து விட்டு ஈழத் தமிழர்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்.

-காலக்கெடு எதுவும் இல்லாமல் உரிய தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் வாடும் நளினி, பொழிலன், குனங்குடி அனீபா உள்பட சிறையாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

-தமிழில் படித்தோருக்கு மட்டுமே தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு, அனைத்து துறையிலும் தமிழே ஆட்சி மொழி, அனைத்து படிப்பிலும் தமிழே பயிற்று மொழி, வழிபாட்டு தலங்களில் தமிழே வழிபாட்டு மொழி என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

-நலிந்து வரும் வியாபாரத்தை லாபகரமாக்கிடவும், நிலம், வீடு, காற்று மாசு அடைவதை தடுக்கவும், தரமான உணவு உற்பத்தி செய்திடவும், நோய்க்கு காரணமான ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை வழி விவசாயத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.

-காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நடைமுறைப்படுத்த உத்தரவிடுமாறு ஜனாதிபதியை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, போர்க்குற்றவாளி ராஜபக்சே, அவருக்கு துணை நின்ற சர்வதேச சக்திகளுக்கு தண்டனை நிறைவேற்றுவதைச் சித்தரிக்கும் வகையில் நாம் தமிழர் அமைப்பினர் நாடகம் நடத்தினர்.

குவிந்தனர் தொண்டர்கள்:

இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பெரும் அளவில் ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் குவிந்துவிட்டனர். ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வந்திருந்ததாக மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+