போக்குவரத்து அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
10.5.2010 அன்று தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் பேருந்து எண் 521ல் பயணம் செய்தனர். டிக்கெட் பரிசோதகர்களான ஜோதி, பஞ்சாட்சரம் மற்றும் பாண்டியன் ஆகியோர் அந்தப் பேருந்தில் பயணிகள் டிக்கெட் வாங்கியிருக்கிறார்களா என பரிசோதனை செய்தனர்.
அப்போது, தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்கள் பயணச் சீட்டு வாங்கவில்லை என்று தெரியவந்ததாகவும், இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு, வாக்குவாதத்தில் அவர்கள் ஈடுபட்டதோடு பரிசோதகர்களை தாக்கியுள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர்கள் அனைவரும் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரால் விசாரணைக்காக தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், விசாரணைக்காக அங்கு சென்ற டிக்கெட் பரிசோதகர்கள் அனைவரும் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் டிக்கெட் பரிசோதகர் ஜோதி என்பவர் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் தங்களுடைய கடமையை ஆற்றியுள்ளது தெரிய வருகிறது. இந்தச் சூழ்நிலையில், விசாரணைக்காக டிக்கெட் பரிசோதகர்களை நிர்வாக இயக்குநர் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைத்தது மிகப்பெரிய தவறு.
ஒருவேளை டிக்கெட் பரிசோதகர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநருக்கு இருக்கிறது.
நிர்வாக இயக்குநரின் தவறான நடவடிக்கை காரணமாக கடமை ஆற்றிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
“பாதுகாக்கப்பட்ட பகுதி" என அறிவிக்கப்பட்ட தலைமைச் செயலகத்திற்குள் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேற்படி சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டும், இந்த கொலை வெறித்தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, கடமையாற்றிய டிக்கெட் பரிசோதகர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்தும், போக்கு வரத்துக் கழகத் தொழிலாளர்களை விசாரணைக்காக தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைத்த மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரைக் கண்டித்தும்,
தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், 22ம் தேதி பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இது, ஜெயலலிதா பேரவைச் செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications