ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருவாரா?

இது தொடர்பாக பேச்சு நடத்த இன்று அவர் டெல்லி சென்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
கடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலின்போது அவர் தனது கட்சியை ஆரம்பித்தார். அந்தத் தேர்தலில் 14 சதவீத வாக்குகளைப் பெற்ற அந்தக் கட்சி 18 இடங்களைக் கைப்பாற்றி காங்கிரஸ், தெலுங்கு தேசத்துக்கு அடுத்த இடத்தையே பிடிக்க முடிந்தது.
இந் நிலையில் அவரை கட்சியில் இணையச் செய்யவோ அல்லது அவருடன் கூட்டணி அமைக்கவோ காங்கிரஸ் முயன்று வருகிறது.
சிரஞ்சீவிக்கு காங்கிரஸ் திடீரென வலை வீசுவதறகு, அதிருப்தி தலைவராக மாறி, கட்சிக்கு பெரும் தலைவலி தந்து வரும் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிதான் காரணம் என்று தெரிகிறது.
தந்தையின் மறைவையடுத்து முதல்வர் பதவிக்கு குறி வைத்தார் ஜெகன். ஆனால், அவரை தவிர்த்துவிட்டு ரோசைய்யாவை முதல்வராக்கினார் சோனியா. இருப்பினும் தன் ஆதரவாளர்களின் உதவியோடு கட்சியில் அவ்வப்போது ஏதாவது பிரச்சனையை உருவாக்கிக் கொண்டே உள்ளார் ஜெகன். இதனால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியாத அளவுக்கு ரோசைய்யா தள்ளப்பட்டுள்ளார்.
தடையை மீறி ஜெகன் யாத்திரை-போலீஸ் துப்பாக்கிச் சூடு:
இந் நிலையில் நேற்று காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவையும் மீறி, மாநில அரசின் தடையயும் மீறி தெலுங்கானா பகுதியில் யாத்திரை நடத்தினார் ஜெகன் மோகன்.
ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தபோது தெலங்கானா பகுதியைச் சேர்ந்த சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதற்காக ஜெகன் மோகன் இந்த யாத்திரையை மேற்கொண்டார்.
தனி தெலுங்கானாவை இவர் எதிர்ப்பவர் என்பதால் இந்த யாத்திரை வேண்டாம் என்று மாநில அரசு கூறியிருந்தது. ஆனால், அதையும் மீறினார் ரெட்டி.
அப்போது ரெட்டியின் ஆதரவாளர்களுக்கும், தெலங்கானா தனி மாநில ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதையடுத்து கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 24 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரெட்டி, இந்த இந்த யாத்திரை அரசியல் சார்ந்ததல்ல. என் குடும்பம் சார்ந்தது. ஆனால் இதை சிலர் அரசியலாக்கி ஆதாயம் தேட முயல்கிறார்கள் என்று காங்கிரஸ் மீதே மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
ஜெகன் மோகன் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். திருப்பதியில் வணிக மையங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். பத்மாவதி விரைவு ரயிலின் இரு பெட்டிகளுக்கு தீ வைத்தனர். இதையடுத்து ரெட்டி விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில் தான் சிரஞ்சீவியை டெல்லிக்கு அழைத்துள்ளது காங்கிரஸ் மேலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபா தேர்தல்...
மேலும் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ராஜ்யசபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஆந்திராவில் ஒரு ராஜ்யசபா எம்.பியை தேர்ந்தெடுக்க 42 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
இதனால் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்குமாறு சிரஞ்சீவியிடம் சோனியா கோருவார் என்று தெரிகிறது.
மேலும் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்குமாறும், கட்சியை காங்கிரசில் இணைக்குமாறும் சோனியா கோருவார் என்று தெரிகிறது.
அடங்கும் ஜெகன் மோகன்:
இந் நிலையி்ல் நிருபர்களிடம் பேசிய ஜெகன் மோகன்,
எனது தந்தை ராஜசேகர ரெட்டி இறந்த துக்கம் தாங்காமல் 690 பேர் இறந்து போனார்கள். என் தந்தையின் இரங்கல் கூட்டத்தில் பேசியபோது இறந்துபோன 690 பேரின் குடும்பங்களுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறுவேன் என்று உறுதி அளித்திருந்தேன். இதன்படி தான் வாரங்கல் பகுதிக்கு ஆறுதல் கூறச் சென்றேன்.
இதற்கு தெலுங்கானா கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை. நான் செல்லும் இடங்களில் அரசியல் பேசினால் கூட பரவாயில்லை. நான் ஆறுதல்தான் கூறுகிறேன்.
இன்னும் சில வாரங்களில் தெலுங்கான பகுதிகளில் 10 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நான் அங்கு சுற்றுப்பயணம் செய்தால் வெற்றி பறிபோய் விடுமோ என்று தெலுங்கானா கட்சியினர் அஞ்சுகிறார்கள். எனவே நான் இடைத் தேர்தலுக்கு பிறகு அப்பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்.
தெலுங்கானா தொண்டர்கள் எதற்கெடுத்தாலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அவர்களை போல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications