இன்று முதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி
சென்னை: தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று (ஜூன் 1) தொடங்கியது.
ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற கணக்கெடுப்பு அலுவலர்கள் அவர்களது குடும்பத்தினர் விவரங்களை சேகரித்தனர்.
இன்று தொடங்கியுள்ள கணக்கெடுப்பு, மாநிலம் முழுவதும் 45 நாள்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.
2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் மே மாதம் வரை, 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. தமிழகம் உள்பட எஞ்சியுள்ள மாநிலங்களில் ஜூன் 1ம் தேதி தொடங்கி, ஜூலை 15ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
கணக்கெடுக்கும் பணியில் 25 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10,000 ஆசிரியர்களும், மத்திய, மாநில அரசு ஊழியர்களும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவர்.
இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.
குடிசை வீடா, ஓட்டு வீடா, மாடி வீடா, வீட்டில் உள்ளது எத்தனை பேர், மணமான தம்பதிகள் எத்தனை பேர்?, வீட்டில் மின் இணைப்பு உள்ளதா?, குடிநீர் இணைப்பு உள்ளதா?, கழிவுநீர் வசதி உள்ளதா?, எரிவாயு இணைப்பு உள்ளதா?,
இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் உள்ளதா?, செல்போன், லேண்ட்லைன் போன் உள்ளதா?, சைக்கிள், மோட்டார் வாகனம், கார் உள்ளதா?, வங்கிக் கணக்கு உள்ளதா?, தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி என்ன?, இந்தியரா அல்லது வெளிநாட்டவரா? போன்ற விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.
இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின், விவரங்களை சேகரித்த அரசு ஊழியரும், குடியிருப்பில் இருப்பவரும் கையெழுத்து இடவேண்டும் என்பது முக்கியம்.
இதற்கு ஒரு ஒப்புகைச் சீட்டுறும் குடியிருப்பில் இருப்பவருக்கு வழங்கப்படும். இந்த ஒப்புகைச் சீட்டை மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களிடம் தரப்படும் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய புகைப்படத்தையோ, வேறு நகல்களையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்களை மட்டும் தெரிவித்தால் போதும்.
இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் அந்தந்தப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புகைப்படமும், கைரேகை பதிவும் எடுக்கப்படும்.
இந்த முகாமுக்கு வரும்போது ஒப்புகைச் சீட்டை மக்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.
இந்த முகாமுக்குப் பின் ஒவ்வொருக்கும் தனி நபர் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
இன்று காலை ராஜ்பவன் சென்ற கணக்கெடுப்பு அதிகாரிகள், அலுவலர்கள், தமிழக ஆளுநர் பர்னாலாவை சந்தித்து தகவல் சேகரித்தனர். அதேபோல கோபாலபுரம் சென்ற அலுவலர் குழு முதல்வர் கருணாநிதி குடும்ப விவரங்களை சேகரித்தனர்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கும் சென்று அலுவலர்கள் தகவல்கள் சேகரித்தனர்.












Click it and Unblock the Notifications