இந்தியாவில் 200 பேரை வேலைக்கு எடுக்கும் பிரான்சின் மிச்சலின்
ரியோ டிஜெனீரோ: பிரான்ஸ் நாட்டின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான மிச்சலின், இந்தியாவில் 200 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளது.
சென்னையில் தனது டயர் தயாரிப்புப் பிரிவை தொடங்கவுள்ளது மிச்சலின். இந்த உற்பத்திப் பிரிவுக்காக 200 பேரை அது வேலையில் அமர்த்தவுள்ளது.
தமிழக உற்பத்திப் பிரிவுக்காக 7 ஆண்டுகளில் படிப்படியாக ரூ. 4000 கோடியை முதலீடு செய்யவுள்ளது மிச்சலின் நிறுவனம். இந்த உற்பத்திப் பிரிவில், லாரிகள் மற்றும் பஸ்களுக்கான டயர்கள் தயாரிக்கப்படவுள்ளன.
ஆளெடுப்பு குறித்து இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்குக்கான மிச்சலின் நிறுவன தலைவர் பிரஷாந்த் பிரபு கூறுகையில், இந்த ஆண்டு 200 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளோம். அவர்கள் மூன்று வார பயிற்சிக்காக தாய்லாந்து அனுப்பி வைக்கப்படுவர். அதன் பின்னர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
அதன் பின்னர் சென்னை பிரிவு அமலுக்கு வரும் வரை வெளிநாடுகளில் உள்ள மிச்சலின் உற்பத்திப் பிரிவுகளில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவர். சென்னை பிரிவு தொடங்கப்பட்டதும் அங்கு மாற்றப்படுவர் என்றார்.
ஏற்கனவே சென்னைப் பிரிவுக்காக 60 பேரை வேலைக்கு எடுத்துள்ளதாம் மிச்சலின்.
சென்னையில் 290 ஏக்கர் பரப்பளவில் மிச்சலின் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு அமைகிறது. இது 2012ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இங்கு உள்ளூரைச் சேர்ந்த 1500 பேருக்கு வேலை கிடைக்கும்.
இந்தியாவில் மிச்சலின் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவுகளில் தற்போது 200 பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, புனே, ராஜங்கோவன் பகுதியில் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 100 ஏக்கர் பரப்பளவில் உற்பத்திப் பிரிவை தொடங்க திட்டமிட்டிருந்தது மிச்சலின். ஆனால் பின்னர் அதை கைவிட்டு விட்டு சென்னைக்கு மாறியது.












Click it and Unblock the Notifications