தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள் மூலம் 183 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டம்
சென்னை:தமிழகத்தில் 12 சர்க்கரை ஆலைகள் மூலம் 183 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து கரும்பு சக்கையிலிருந்து இந்த மின்சாரம் தயாரிக்கப்படவுள்ளது.
தமிழக தொழில்துறையும், மின் வாரியமும் இணைந்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1125.63 கோடி மதிப்பீட்டில் இணை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும், சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்தவும் திட்டமிட்டுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கோட்டையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் கருணாநிதி பேசுகையி்ல்,
தமிழகத்தில் உள்ள 10 கூட்டுறவு துறை, 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கும், ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டமும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சர்க்கரை ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்க பெரிதும் பயன்படும்.
சர்க்கரை ஆலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க அரசு ஊக்கம் அளித்து வருவதுடன் கரும்பு விவசாயிகள் நலன் கருதியும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் தொடர்ந்து முழு அரவை திறனுடன் இயங்கிட ஏதுவாகவும் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.2,000ம் வீதம் வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் நிதிநிலையை மேம்படுத்தி, கரும்பு துணை பொருட்களில் ஒன்றாகிய கரும்பு சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்க அரசு முடிவெடுத்தது.
அதன் அடிப்படையில் தான் 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.849.36 கோடியில் இணை மின் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கும், ரூ.276.27 கோடியில் ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டத்துக்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் 12 கரும்பு ஆலைகளை சேர்ந்த விவசாயிகளின் பங்களிப்புடன் மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.
18 மாதங்களில் இத்திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் மின் வாரியத்துக்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் வாயிலாக சர்க்கரை ஆலைகளும், சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகளும், மின்சார நுகர்வோரும் மிகுந்த பயன் அடைவர். சுமார் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் 183 மெகாவாட் மின்சாரத்தில் சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான 63 மெகாவாட் மின்சாரம் போக மீதமுள்ள 120 மெகாவாட் மின்சாரம் மக்களுக்கு பயன்படும் வகையில் மின்சார வாரியத்துக்கு அளிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications