ஓகனேக்கல் குடிநீர் திட்ட விவகாரம் - 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: ஓகனேக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டமத்தை நிறைவேற்றாமல், தர்மபுரி மாவட்ட குடிநீர்த் தட்டுப்பாட்டை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அரசு விளம்பரப்படுத்திக் கொண்டாலும், அதை நிறைவேற்றுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மொத்தத்தில் தர்மபுரி மாவட்டம் கடும் வறட்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் தி.மு.க. அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டினை தடுக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், இந்த மாவட்டத்தில் நிலவும் குடிநீர்ப் பஞ்சத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும்,
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும், மழை நீர் சேமிப்புத் திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றிட வலியுறுத்தியும், 28 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்,
தர்மபுரி மாவட்டக்கழகத்தின் சார்பில், 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமையில், தர்மபுரி மாவட்டக் கழகச் செயலாளர் அன்பழகன் முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications