கருணாநிதிக்கு தேர்தல் 'ஜூரம்': ஜெயலலிதா சொல்கிறார்
சென்னை: கருணாநிதியை தேர்தல் 'ஜூரம்' கவ்விக் கொண்டிருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 27.5.2010 அன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு மே மாதம் 27ம் தேதி வருவதற்குள் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புனித ஜார்ஜ் கோட்டையில் அதிமுக ஆட்சியில் அமர்ந்திருக்கும் என்று நான் தெரிவித்திருந்தேன்.
உடனே, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தில் உள்ள இருக்கைகளை அகற்றியுள்ளார் கருணாநிதி.
செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்தின் நூலகத்திற்கு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தை ஒதுக்கித் தருமாறு அந் நிறுவனத்தின் பொறுப்பு அலுவலரிடமிருந்து 27.5.2010 அன்றே ஒரு கடிதத்தையும் பெற்றிருக்கிறார்.
இந்தக் கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைக்கும் உத்தரவிட்டிருக்கிறார் கருணாநிதி.
அந்தத் துறையும் உடனடியாக அன்றே இதற்கான கோப்பை தமிழ்நாடு சட்டமன்ற செயலகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இதையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தை தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைக்கு ஒப்படைப்பு செய்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகமும் 2.6.2010 அன்று ஆணை பிறப்பித்திருக்கிறது.
கருணாநிதியின் இந்த நடவடிக்கையில் இருந்தே தேர்தல் 'ஜூரம்' கருணாநிதியை எந்த அளவுக்கு கவ்விக் கொண்டிருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
என் மீதும், அதிமுக மீதும் விசுவாசம் கொண்ட புரட்சித் தலைவரின் உண்மையான தொண்டர்கள், உடன்பிறப்புகள் தீயசக்தியுடன் நிச்சயமாக கைகோர்க்க மாட்டார்கள்.
நாட்டு நலன் கருதி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொள்ள பெரும்பாலான திமுகவினர் தயாராக இருக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் தெரிய வரும் என்பதை மட்டும் இந்தத்தருணத்தில் தெரிவித்துக்கொண்டு, கழக உடன்பிறப்புகளின் ஊக்கமிகு பணியாற்றலோடு, ஏற்றமிகு வெற்றியினை ஈட்டி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி தமிழகத்தில் வெகு விரைவில் மலரப் போவது உறுதி என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இனி திங்கள் to சனி வரை தொண்டர்கள் மனு தரலாம்:
இதற்கிடையே ஜெயலலிதா வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலாளர் தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து கழக உடன் பிறப்புகளிடம் இருந்து மனுக்களைப் பெறும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மனுக்களைப் பெற குழு அமைக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
(திங்கள்) மதுசூதனன், (அவைத் தலைவர்), சோழன், பழனிச்சாமி (விவசாயப்பிரிவு செயலாளர்), ஜெனிபர் சந்திரன் (மீனவர் பிரிவு இணைச் செயலாளர்).
(செவ்வாய்) பொன்னையன் (அமைப்பு செயலாளர்), சோழன். பழனிச்சாமி (விவசாயப்பிரிவு செயலாளர்), ஜெனிபர் சந்திரன் (மீனவர் பிரிவு இணைச் செயலாளர்)
(புதன்) விசாலாட்சி நெடுஞ்செழியன் (அமைப்பு செயலாளர்), பாலகங்கா எம்.பி. (தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்), அன்வர்ராஜா (சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்).
(வியாழக்கிழமை) சுலோச்சனா சம்பத் (அமைப்பு செயலாளர்), ஜஸ்டின் செல்வராஜ் (சிறு பான்மையினர் நலப்பிரிவுத் தலைவர்), வைகைச் செல்வன் (இலக்கிய அணிச் செயலாளர்)
(வெள்ளிக்கிழமை) பி.எச். பாண்டின் (எம்.ஜி.ஆர். மன்றத்தலைவர்), தளவாய் சுந்தரம் (அமைப்புச் செயலாளர்), கே.கே.கலை மணி (மீனவர் பிரிவுச் செயலாளர்)
(சனிக்கிழமை) மதுசூதனன் (அவைத்தலைவர்), வேணு கோபால் எம்.பி. (மருத்துவ அணிச் செயலாளர்), வி.எஸ்.சேதுராமன் (வக்கீல் பிரிவு தலைவர்).
இந்தக் குழுவினர் தலைமைக் கழகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கழக உடன் பிறப்புகளிடமிருந்து மனுக்களை பெற்று அவற்றை கழக பொதுச் செயலாளரிடம் சமர்ப்பிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
திமுகவில் இணைந்தார் கரூர் சின்னச்சாமி:
இந் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று மாலை திமுகவில் இணைந்தார் கரூர் சின்னச்சாமி.
சமீபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துச்சாமி திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் இன்னொரு முன்னாள் அதிமுக அமைச்சரான கரூர் சின்னச்சாமி இன்று திமுகவில் இணைந்தார்.
இதற்காக ஏராளமான ஆதரவாளர்களுடன் சென்னைக்கு வந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். உறுப்பினர் படிவத்திலும் கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 12,000 பேருடன் இன்னொரு நாளில் திமுகவில் முறைப்படி இணைவோம் என்றார்.












Click it and Unblock the Notifications