தமிழர்களின் போராட்டத்தை நசுக்கவே இந்திய-இலங்கை ஒப்பந்தங்கள்!-வைகோ
சென்னை: ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைத் தடுக்க, இந்தியாவுடன் இலங்கை அரசு, 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழத் தமிழர்களை காலில் போட்டு நசுக்கவும், உரிமைப் போராட்டத்தைத் தடுக்கவும், ராஜபக்சே கேட்டதையெல்லாம் இந்திய அரசு அள்ளித் தந்துவிட்டது. இரு நாடுகளுக்கு இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
இலங்கையில் மின்சார உற்பத்திக்கு ஆயிரம் கோடி ரூபாயும், ரயில்வே உள்ளிட்ட மற்ற திட்டங்களுக்கு ரூ.4,000 கோடியும் கொடுக்க இந்தியா ஒப்புக் கொண்டு உள்ளது. இலங்கையில் ஈழத் தமிழர்களின் பண்பாடு, கலாசார அடையாளங்களே இல்லாமல் அழித்து ஒழிக்கும் செயல்கள் தீவிரமாக நடக்கின்றன.
பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள், தமிழக மண்ணில் கால் எடுத்து வைக்கக் கூட அனுமதிக்காத இந்திய அரசு, கொலை குற்றவாளி டக்ளஸ் தேவானந்தாவுக்கு, வரவேற்புக் கொடுப்பதும், அவரோடு பிரதமர் மன்மோகன் சிங் கை குலுக்குவதும், தமிழர்களின் தன்மானத்துக்கு இந்திய அரசு விடுக்கின்ற சவால் ஆகும்," என்று வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications