ராஜிவ்-காங்கிரஸை காப்பாற்ற 'பலி கடா' ஆக்கப்படும் அர்ஜூன் சிங்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போபால் விஷவாயுக் கசிவு விவகாரத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆன்டர்சனை அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங்தான் தப்பவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் உறவினருமான அருண் நேரு குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், ஆன்டர்சன் தப்பிய விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை. இதனால் இந்த விவகாரத்தில் அவரை தொடர்புபடுத்துவது தேவையற்றது.

ஆன்டர்சனை தப்பவிட்டது அர்ஜுன் சிங்கின் தனிப்பட்ட முடிவு, இதில் ராஜீவ் காந்திக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை.

1984ல் போபால் விஷவாயுக் கசிவு சம்பவம் நடந்த பின்னர் மத்திய பிரதேச முதல்வராக இருந்த அர்ஜுன் சிங், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆன்டர்சன் இந்தியாவைவிட்டு செல்ல தான் அனுமதி அளித்ததை ஒப்புக்கொண்டார்.

அர்ஜுன் சிங்கே இப்படி ஒப்புக்கொண்ட நிலையில் இங்கு ராஜீவ் காந்தியை தொடர்புபடுத்தி சர்ச்சையை ஏற்படுத்துவது நியாயமாகாது.

விஷவாயுக் கசிவு சம்பவம் நிகழ்ந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும், மறுவாழ்வும் அளிப்பதுதான் முதல்வர் என்ற அடிப்படையில் அர்ஜுன் சிங்குக்கு அப்போது முக்கியமானதாக இருந்திருக்கும்.

இதனால் சூழ்நிலை கருதி அவர் ஆன்டர்சன் இந்தியாவைவிட்டுச் செல்ல அனுமதி அளித்திருக்கலாம். ஆன்டர்சனை தப்பவிட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இப்போதுதான் அதுகுறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் விழித்துக் கொண்டுள்ளோம்.

ஒருவேளை இப்போது ஏதாவது ஒரு பேரழிவு ஏற்படுமேயானால் இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு கண்களை மூடிக்கொண்டு இருப்போமா.

நாட்டையே உலுக்கிய, துயரமான இந்த சம்பவம் குறித்து விசாரித்து முடிக்க 25 ஆண்டுகளை நீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பால் குற்றவாளிகளுக்கு எதிரான புகாரும் நீர்த்துப்போயுள்ளது. இது ஏன் என்று கேள்வி எழுப்புவது அவசியம் என்றார் அருண் நேரு.

1988ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அருண் நேரு ராஜிவுடன் மோதினார். பின்னர் வி.பி. சிங்குடன் ஜன் மோர்ச்சாவில் தீவிரமாக இருந்தார். சிங்கை பிரதமர் ஆக்கியதிலும் நேருக்கு முக்கிய பங்குண்டு.

பின்னர் சில காலம் பாஜகவை ஆதரித்த நேரு இப்போது மீண்டும் காங்கிரசுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டர்சனை விடுவித்தது அர்ஜூன் சிங் தான் என்றரீதியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் பேசியுள்ளார்.

இதன்மூலம் இந்த விவகாரத்தில் அர்ஜூன் சிங் மீது முழுப் பழியை போட்டுவிட்டு தப்பிக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. தனது கட்சிக்காக அர்ஜூன் சி்ங்கும், பழியை சுமக்கத் தயாராகிவிட்டதாகவே அரசியல்பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சோனியா மெளனம்- நரேந்திர மோடி கோபம்:

இந் நிலையில் ஆண்டர்சன் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மெளனம் சாதிப்பது ஏன் என்று குஜராத் முதல்வர்: நரேந்திர மோடி தாக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாட்னாவில் நடந்த பாஜக பேரணியில் பேசிய அவர், இந்த விஷயத்தில் நாட்டு மக்களுக்கு சோனியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

இடதுசாரிகள் இன்று முதல் ஆர்ப்பாட்டம்:

இதற்கிடையே போபால் விஷவாயு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்ப்பு வழங்கக் கோரி மத்தியப் பிரதேசம் முழுவதும் இரு வாரங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

10 நாளில் அறிக்கை-பிரதமர் உத்தரவு:

இதற்கிடையே போபால் விஷவாயு கசிவினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவி போன்றவை குறித்து ஆய்வு நடத்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்துள்ளார்.

இந்தக் குழு தங்களது அறிக்கையை இன்னும் 10 நாளில் தாக்கல் செய்ய வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+