கழிப்பிடம் ஆக்கிரமிப்பு: சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்-ஜெயலலிதா
சென்னை: வட சென்னையில் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கழிப்பிடங்கள் திமுகவினரால் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வட சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு உட்பட்ட 10வது வட்டத்தின் நடைபாதைவாசிகளுக்காக எனது ஆட்சிக் காலத்தில் 1,511 மனைகள் உருவாக்கப்பட்டதோடு, இவர்களுக்காக 96 பொது கழிப்பிடங்களும் குடிசை மாற்று வாரியத்தால் கட்டித்தரப்பட்டன.
ஆனால், மேற்படி குடியிருப்புதாரர்கள் தங்கள் மனைகளுக்கு உள்ளேயே கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொண்டதால் பொதுக் கழிப்பிடம் பயனற்றுப் போனது. எனவே, இந்த பொதுக் கழிப்பிடத்தை அகற்றிவிட்டு மனைகளாக மாற்ற எனது ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2006ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, 96 பொதுக் கழிப்பிடங்கள் அமைந்திருந்த குடிசை மாற்று வாரிய இடத்தை திமுகவினர் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்து வருகிறார்கள். இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்ட நிலம் தேவைப்பட்டதால், அங்கு குடியிருந்தவர்களுக்கு வேறு குடியிருப்புகள் ஒதுக்கும் பொருட்டு, பாரதி நகர் பகுதி-2ல் 108 வீடுகள் எனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன.
2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக, மேற்படி குடியிருப்புகளை உரியவர்களுக்கு ஒதுக்க இயலவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மேற்படி குடியிருப்புகளை உரியவர்களுக்கு ஒதுக்காமல், திமுகவினருக்கு ஒதுக்கீடு செய்து வருகின்து. திமுக அரசின் இது போன்ற முறையற்ற செயல் காரணமாக கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகர், பாரதி நகர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தண்டையார்பேட்டை பகுதியையும், கொருக்குப்பேட்டை பகுதியையும் இணைக்கும் வைத்தியநாதன் பாலம் எனது ஆட்சிக் காலத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பாலத்தை தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தப் பாலம் தற்போது பழுதடைந்துள்ளது. மேற்படி பாலம் சீர் செய்யப்பட வேண்டும் என்று பொது மக்களும், பத்திரிகைகளும் சுட்டிக்காட்டிய பிறகும் திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்தாமல், ஆக்கிரமிப்பு, முறைகேடு ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருக்கும் திமுக அரசைக் கண்டித்தும், பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கழிப்பிடங்கள் திமுகவினரால் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாரதி நகர் பகுதி-2ல் கட்டப்பட்ட 108 குடியிருப்புகளை உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும்,
தண்டையார்பேட்டை பகுதியையும், கொருக்குப்பேட்டை பகுதியையும் இணைக்கின்ற வைத்தியநாதன் பாலத்தை உடனடியாக சீர்செய்ய வலியுறுத்தியும், வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
மின்வெட்டு-விழுப்புரத்தில் தேமுதிக ஆர்ப்பாட்டம்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் உற்பத்தி அதிகரித்ததால் மாவட்டங்களில் மின்வெட்டு குறைக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். மக்கள் இந்த அறிவிப்பினால் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், அறிவித்த சில தினங்களிலேயே மீண்டும் ஏற்கனவே இருந்ததை விட கடுமையான மின்வெட்டை ஜூன் 3ம் தேதி முதல் மின்சார வாரிய அதிகாரிகள் அறிவித்தனர்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 11 மணி நேரம் மின்சாரம் இல்லை. ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேட்டால் காற்றாலை மூலம் வரவேண்டிய மின் உற்பத்தி திடீரென்று' குறைந்து விட்டதாகவும், நீர் மின்சாரம் உற்பத்தி மழையை நம்பி இருப்பதனாலும் சுமார் 3,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
வாழ்க்கைக்கு இன்றியமையாத மின்சாரம் எப்போது வரும்? எப்போது போகும்? என்று தெரியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நாளை காலை வாட்டி வதைக்கும் வரலாறு காணாத மின்வெட்டை அமல்படுத்தும் திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், தேமுதிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications