டக்ளஸ் தேவானந்தா குறித்த கருத்தை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொலை, குழந்தைக் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி தமிழகத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யும் விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜபக்சே அமைச்சரவையில் வீற்றிருக்கும் டக்ளஸ், இந்திய சட்டப்படி, ஒரு தலைமறைவு குற்றவாளி ஆவார். அவர் மீது குழந்தை கடத்தல், படுகொலை, கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளில் சென்னையில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டால் அறிவிக்கப்பட்டவர் அவர்.

ஆனால் சமீபத்தில் ராஜபக்சே இந்தியா வந்திருந்தபோது, அவருடன் சேர்ந்து வந்திருந்தார் டக்ளஸ். இதையடுத்து அவரைக் கைது செய்ய கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக தமிழக காவல்துறையும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் டக்ளஸ் குறித்த விவரத்தை பத்திரிக்கைளைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

இந்த அரசியல் குழப்பத்தால், டக்ளஸ் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்குப் போய் விட்டார்.

முன்னதாக டக்ளஸைக் கைது செய்யக் கோரி, தமிழ்நாடு மக்கள் உரிமை கழக செயலாளர் புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார்.

அவர் வாதிடுகையில்,

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். கடந்த 16 ஆண்டுகளாக இவர் கைது செய்யப்படவில்லை.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இலங்கை-இந்திய இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஏதும் இருக்கிறதா? இந்த விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க முடியுமா? அல்லது அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? என்று கேட்டார்.

அதற்கு வக்கீல் ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், அயல்நாட்டில் உள்ள ஒரு குற்றவாளியை இந்தியாவிற்கு அழைத்து வந்து நமது நாட்டு சட்டத்தில் தண்டிக்க வழிவகை உள்ளது. இந்திய-இலங்கை நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, டக்ளஸ் தேவானந்தாவை இந்திய அரசு எந்த நேரத்திலும் கைது செய்ய முடியும் என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் நாம் என்ன செய்ய முடியும்? வேறு ஏதேனும் நடைமுறை உள்ளதா? என்றார்.

ராதாகிருஷ்ணன் அதற்குப் பதிலளிக்கையில்,அரசு, டக்ளஸ் தேவானந்தா தொடர்பான ஆவணங்களை இலங்கைக்கு அனுப்பலாம். ஆனால், இது ஒரு நீண்ட நடைமுறை ஆகும். தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா சமீபத்தில் இந்தியாவிற்கு வந்தபோது விருந்தினர் போல நடத்தப்பட்டு உள்ளார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த மனுவை வாபஸ் பெற்றுவிட்டு, மத்திய அரசை நீங்கள் அணுகலாமே? என்றார்.

அதற்கு வக்கீல் ராதாகிருஷ்ணன், இந்த விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே கடந்த 7-ந் தேதி, 8-ந் தேதிகளில் விரிவான மனுவை அனுப்பினேன். சாதாரண குற்றவாளியாக இருந்தால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு சுதந்திரமாக வந்துவிட்டு போயிருக்கிறார். அவர் இந்திய மண்ணில் கால்வைப்பதற்கு முன்பே நான் அனுப்பிய மனுக்கள் மத்திய அரசுக்கு கிடைத்துவிட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் கோர்ட்டுதான் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்படியொரு முடிவை எடுக்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றார்.

தலைமை நீதிபதி: இப்போது டக்ளஸ் தேவானந்தா நாடு திரும்பிவிட்டாரா?

வக்கீல்: ஆம். அவர் இலங்கைக்கு திரும்பி போய்விட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் சினேகா வாதிடுகையில், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் டெல்லி போலீசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மத்திய அரசின் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று பதிலளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளின் கருத்தை அறிந்து அரசு வக்கீல்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+