ஒரு மாத பரோலில் பிரேமானந்தா விடுதலை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!
திருச்சி: ஒரு மாத கால பரோலில் விடுதலைப் பெற்றுள்ளார் கொலை, கற்பழிப்பு வழக்குகளில் தண்டனை பெற்ற பிரேமானந்தா.
திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். இவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்பு இந்த வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
இதையடுத்து கடலூர் சிறையில் சாமியார் பிரேமானந்தா அடைத்தப்பட்டுள்ளார்.
இந் நிலையில், சாமியார் பிரேமானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனக்கு சிறுநீரக கோளாறு, கண்புரை, இதய நோய் போன்ற நோய்கள் உள்ளது. முன்பு எனக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த நோய்களுக்காக கடலூர் சிறையில் உள்ள மருத்துவமனையிலும், கடலூர் அரசு மருத்துவமனையிலும் நான் சிகிச்சை பெற உரிய வசதிகள் இல்லை.
எனவே நான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மூன்று மாதம் பரோலில் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: "இந்த வழக்கில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும் போது, பிரேமானந்தா நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரிய வருகிறது. மேலும் 08.05.08, 03.04.09 ஆகிய தேதிகளில் அவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டு உள்ளது.
கடலூர் சிறை மருத்துவமனையில் இருதய நோய்க்கு சிகிச்சை வழங்கவும், அவசர மருத்துவ உதவிகள் வழங்கவும் வசதிகள் இல்லை. கடலூர் அரசு மருத்துவமனையிலும் அந்த வசதிகள் இல்லை. ஆனால் பிரேமானந்தாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தெரிகிறது.
ஆயுள் தண்டனை கைதியாக இருந்தால்கூட முறையான மருத்துவ வசதி பெறுவதற்கு தகுதி உள்ளது. ஆனால் அதை உரிமையாக அவர் கோர முடியாது. சிறை விதிகள் 20ன் படி சிகிச்சைக்காக பரோலில் கைதிகளை அனுமதிப்பதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.
அவரது நோயின் தன்மையை கருத்தில் கொண்டால், அவற்றுக்கான சிகிச்சைகள், தனியார் மருத்துவமனையில்தான் கிடைக்கின்றன. எனவே தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதி கேட்டு பிரேமானந்தா கொடுத்த மனுவை இன்னும் ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்.
அனுமதிப்பதாக முடிவு செய்தால், 30 நாட்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட வேண்டும். இதை மேலும் நீட்டிக்க வேண்டுமென்றால், மருத்துவ சான்றுகள், அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நீட்டிக்கலாம். எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகிறார் என்பதை பிரேமானந்தா முதலிலேயே குறிப்பிட வேண்டும்.
ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருத்துவமனை என்று கேட்கக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஆசிரமத்துக்கோ, வேறு இடங்களுக்கோ செல்லக் கூடாது. மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும். அவருக்கு பாதுகாப்புக்காக அனுப்பப்படும் போலீஸ் பாதுகாப்புக்கான செலவை பிரேமானந்தாவே ஏற்க வேண்டும். சிகிச்சை செலவும் அவருடையதே என்று தீர்ப்பளி்த்தார்.
நிபந்தனைகளை பிரேமானந்தா தரப்பு ஏற்றுக் கொண்டது.












Click it and Unblock the Notifications