கோவை காந்திபுரத்தில் ரூ.100 கோடியில் மாபெரும் மேம்பாலம்
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.100 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
மாநாட்டில் அவர் கூறுகையில், காந்திபுரம் பகுதியில் பஸ் நிலையங்கள் உள்ளதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோவை மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே குறுக்குச் சாலை, நூறடிச் சாலை, சத்தியமங்கலம் சாலை ஆகியவற்றை கடக்கக் கூடிய சந்திப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள பெரிய மேம்பாலம் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும் என்றார்.
908 ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பு:
இந்த மாநாட்டில் நடந்த 239 ஆய்வரங்க அமர்வுகளில் 908 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 23 அரங்குகளில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
செம்மொழி சிறப்பு தபால் தலை:
மாநாட்டின் நிறைவு விழாவில் மாநாட்டின் சின்னமான திருவள்ளுவர் சிலை பொறிக்கப்பட்ட சிறப்பு தபால் தலை மற்றும் குமரகுருபரர் நினைவு தபால் தலையை மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ராசா வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications