Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரோல் விலை உயர்வு-ஜூலை 13ல் ஜெ. தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் ஜூலை 13ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

4 ஆண்டு காலம் ஆகியும் மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, விலைவாசியை மேலும் உயர்த்தும் விதமாக, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு தற்போது மேலும் உயர்த்தி இருக்கிறது. இதன் காரணமாக, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சர்வதேச சந்தை விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், இதேபோன்று டீசல் விலையை உயர்த்தவும் அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதன் விளைவாக விலைவாசி மேலும், மேலும் உயர்ந்து கொண்டே போகும் அபாயம் உருவாகியுள்ளது.

அடுத்தபடியாக மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை வரலாறு காணாத மின்வெட்டு. அனல் மின் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாததும், மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை கேட்டுப் பெறாததும், நிர்வாகத் திறமையின்மையும், மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காததும் தான் இதற்கான முக்கியமான காரணங்கள்.

இதன் விளைவாக, தமிழகத்தின் வேளாண் உற்பத்தி, தொழில் உற்பத்தி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் ஊதிய இழப்பிற்கும், வேலையிழப்பிற்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். மாணவ-மாணவியரின் படிப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்க்க தி.மு.க. அரசு இதுநாள் வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோன்று உரத்திற்கு அளித்து வந்த மானியமான 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு குறைத்ததோடு, உர விலை மீதான கட்டுப்பாட்டையும் நீக்கியுள்ளது. இதன் காரணமாக உர விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதாக மத்திய அரசு அறிவிக்கிறதேயொழிய அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக நூலின் விலை தாறுமாறாக உயர்ந்து, நெசவுத் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தியாளர்களும் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இது தவிர, தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து, காவேரி, பாலாறு, பொன்னையாறு, முல்லைப் பெரியாறு ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமைகள் ஒன்றன் பின் ஒன்றாக பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

இப்போது புதிதாக பாம்பாற்றின் குறுக்கே, மறையூர் அருகே உள்ள கோவில்கடவு பகுதியில், நீர்மின் திட்டத்திற்காக கேரள அரசு புதிய அணை கட்டப்போவதாக செய்திகள் வருகின்றன. இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் அமராவதி அணையை நம்பி உள்ள 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்படும். நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

எனவே, சட்டம் ஒழுங்கு சீரழிவு; விஷம்போல் ஏறும் விலைவாசி; கடுமையான மின்வெட்டு; போலி மருந்து, காலாவதியான மருந்து, காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை; நூல் விலை உயர்வு; உர மானியம் குறைப்பு; பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விலை உயர்வு;

குடிநீர் தட்டுப்பாடு என தமிழக மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ள மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், ஸ்பெக்ட்ரம் ஊழல்; மணல் கொள்ளை; ரேஷன் பொருட்கள் கடத்தல் போன்றவற்றை கண்டித்தும், அ.தி.மு.க. சார்பில் 13-7-2010 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12 மணி அளவில், கோவை வ.உ.சி திடலில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+