தமிழக அரசுக்கு விழா எடுக்கும் திருப்பூர் சிபிஎம் எம்எல்ஏ-திமுகவில் சேருவாரா?

சமீப காலமாக கோவி்ந்தசாமி கட்சி சார்பிலான எதிலும் கலந்து கொள்வதில்லை. இதனால் அவர் திமுகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அதை அவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மறுத்து வந்தனர்.
சமீபத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தின் போது சிபிஎம் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் கோவிந்தசாமி பங்கேற்கவில்லை.
நேற்று திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதிலும் கோவிந்தசாமி பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், திமுக அரசுக்குப் பாராட்டு விழா நடத்தப் போவதாக கோவிந்தசாமி அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கோவிந்தசாமிக்கு கட்சி சார்பில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.காமராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில், தி.மு.க. அமைச்சர்களை அழைத்து பாராட்டு விழா நடத்துவது, நமது கட்சி பின்பற்றி வரும் நடைமுறை கொள்கைகளுக்கு எதிரானது. எனவே திருப்பூரில் தாங்கள் உத்தேசித்துள்ளபடி ஆகஸ்டு 1-ந்தேதி தி.மு.க. அமைச்சர்களுக்கு பாராட்டு விழா நடத்தக்கூடாது என்று கட்சியின் மாவட்ட குழு முடிவு செய்துள்ளது.
மாவட்ட குழு முடிவை மீறி கூட்டம் நடத்தினால், உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனால் கோவிந்தசாமி கலங்கவில்லை என்று தெரிகிறது. நேற்று செய்தியாளர்களை அவர் சந்தித்து விழா குறித்து விரிவாகப் பேசினார்.
அவர் கூறுகையில்,
திருப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு நான் எம்.எல்.ஏ.ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு திருப்பூர் தொகுதியில் தமிழக அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளது. இது தவிர தொகுதியின் வளர்ச்சிக்காக நான் சட்டசபையில் முன் வைத்த கோரிக்கைகளில் பல நிறைவேற்றப்பட்டு விட்டன. சில கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.
இதற்காக திருப்பூர் சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆகஸ்டு 1-ந் தேதி எனது தலைமையில் திருப்பூரில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதுதவிர மத்திய அமைச்சர் ராசா, தமிழக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பொங்கலூர் பழனிசாமி உள்பட தமிழக அமைச்சர்கள் பலரும், பொதுமக்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவுக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டி செலவு செய்யப்படும் என்றார்.
கோவிந்தசாமியின் இந்த செயலால் கம்யூனிஸ்ட் வட்டாரம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.












Click it and Unblock the Notifications