நாட்டின் உணவுப் பணவீக்கம் 12.81 சதவீதமாக உயர்வு
டெல்லி: ஜூலை 3ம் தேதியுடன் முடிவைடந்த வாரத்தில் நாட்டின் உணவுப் பணவீக்கம் 12.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முந்தைய வாரத்தில் இது 12.63 சதவீதமாக இருந்தது.
கடந்த மாதம் பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியதையடுத்து பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன. இதனால் உணவுப் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.
(உணவுப் பணவீக்கம் என்பது உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் குறிக்கும் மறைமுக பொருளாதார அளவீடாகும்)
காய்கறிகளின் விலை 5.70 சதவீதம் குறைந்து காணப்பட்டாலும் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பு அடுத்த சில வாரங்களில் தான் முழுமையாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், குறுவை சாகுபடி பயிர்கள் சந்தைக்கு வரத் தொடங்கும்போது உணவுப் பணவீக்கம் குறைந்துவிடும் என்கிறார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
பணவீக்கம் 10.55 சதவீதமாக உயர்வு:
இதற்கிடையே நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் ஜுன் மாதத்தில் 10.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பணவீக்கம் இரட்டை இலக்க அளவிற்கு அதிகரித்துள்ளதால், நாட்டின் பணப் புழக்கத்தை குறைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications