For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் கிரானைட் கடத்தல்: செய்தி வெளியிட்ட தினபூமி ஆசிரியர் கைது-ஜாமீனில் விடுதலை

Google Oneindia Tamil News

Thenkasi Press Reporters Meet
சென்னை: விதிமுறைகளை மீறி மதுரையில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவது குறித்து செய்தி வெளியிட்ட தினபூமி நாளிதழ் ஆசிரியர் எஸ். மணிமாறன், சிறப்புச் செய்தியாளர் ரமேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.

மதுரை கிரானைட் அதிபர்கள் சங்க நிர்வாகி அளித்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினபூமி நாளிதழ் அதிபர் மற்றும் ஆசிரியராக இருப்பவர் கே.எஸ். மணிமாறன். இவர் மீது மதுரை மாவட்ட கிரானைட் அதிபர்கள் சங்க நிர்வாகி பெரியசாமி என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் மணிமாறன் உள்ளிட்ட 4 பேர் கோரிப்பாளையத்தில் நண்பர்களுடன் டீ குடித்துக் கொண்டிருந்த தன்னிடம் வந்து கிரானைட் முறைகேடு தொடர்பான செய்தியை வெளியிடாமலிருக்க பணம் கேட்டதோடு, மிரட்டி பணப்பையைப் பறிக்க முயற்சித்ததாகவும் கூறியிருந்தார்.

தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியிடம் இதுகுறித்து பெரியசாமி புகார் அளித்ததாகவும், அவரது பரிந்துரையின் பேரில் மணிமாறன் உள்ளிட்டோர் மீது 341 (வழிமறித்தல்), 387 (வழிப்பறி முயற்சி), 392 (ஆபாசமாகத் திட்டுதல்), 294/பி ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்தல், 506/2 (கொலை மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, நேற்று முன் தினம் அதிகாலையில் கே.கே.நகரில் இருந்த எஸ். மணிமாறன், அவரது மகன் ரமேஷ்குமார், மேலூர் கீழையூரைச் சேர்ந்த முத்தையா (40) ஆகியோரை போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்:

தினபூமி பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விதிமுறைகளை மீறி மதுரையில் கிரானைட் கடத்தப்படுவது தொடர்பாக செய்தி வெளியிட்ட தினபூமி நாளிதழ் ஆசிரியர் எஸ். மணிமாறன், சிறப்புச் செய்தியாளர் ரமேஷ்குமார் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. செய்திகளை வெளியிடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமான செயல். வாய்ப்பூட்டு போடும் நடவடிக்கைகள், கருத்து சுதந்திரத்தை படுகுழியில் தள்ளிவிடும். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் ஜனநாயகத்துக்கு விடப்படும் சவால்களாகவே கருதுகிறோம்.

இந்தக் கைது சம்பவத்தைக் கண்டிப்பதுடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.

அதே போல மதுரை செய்தியாளர்கள் சங்கமும் தினபூமி ஆசிரியர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் ரா.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்பட்டு வரும் பத்திரிகைகள் மீது சமீபகாலமாக தாக்குதல், பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.

கல்குவாரி ஏலம் முறைகேடு குறித்து செய்தி வெளியிட்ட தினபூமி அதிபர், ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. பத்திரிகை ஆசிரியர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருப்பதற்கு மதுரை பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

பாஜக கடும கண்டனம்:

இந்தக் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் நடைபெற்று வரும் சுரங்கத் தொழில் பற்றியும், கிரானைட் குவாரிகளில் நடைபெறும் ஊழல்கள் பற்றியும் தொடர்ந்து எழுதி வந்த காரணத்தால் தினபூமி நாளிதழின் ஆசிரியர் எஸ். மணிமாறன் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நள்ளிரவில் குடும்பத்தினர் இருக்கும்போது கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பத்திரிகை ஆசிரியர் ஒருவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவரது எழுத்துக்களில் தவறு இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் மூலமாகவோ, மற்ற அரசு நடவடிக்கைகளின் மூலமாகவோ தீர்வு கண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தென்காசி பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்:

மணிமாறன் கைது செய்யப்பட்டதற்கு தென்காசி பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென்காசி பத்திரிக்கையாளர் சங்கத்தின் அவசர கூட்டம் தலைவர் எம்.முத்துசாமி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு செயலாளர் கணேசன் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பத்திரிக்கையாளர் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. மதுரை தினபூமி ஆசிரியர் மீதும் நேற்று முன்தினம் இரவு இச்செயல் தொடர்ந்துள்ளது கண்டனத்திற்குரியது.
உண்மைகளை வெளிச்சம் கொண்டு வரும் பத்திரிக்கையாளர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதையும், இனி பத்திரிக்கையாளர்கள் இதுபோன்ற கொடூரங்களை சந்திக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முரளிதரன், ஜீவா, செந்தில், முருகன், இசக்கிராஜன், முத்தையா, ஆறுமுகநயினார், முப்புடாதி, இலஞ்சிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜாமீனில் விடுதலை:

இந் நிலையில் கே.எஸ்.மணிமாறன், நிருபர் ரமேஷ் மற்றும் முத்தையா ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த மதுரை மாவட்ட ஜெ.எம்.2 நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே இன்று காலை தினபூமி நாளிதழ் அலுவலகம் முன், மதுரை குவாரி தொழிலாளர்கள் 500 பேர் கூடி கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X