For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் கிரானைட் கடத்தலை அம்பலப்படுத்திய ஆர்டிஐ சேவகர் படுகொலை

Google Oneindia Tamil News

Jethwa
அகமதாபாத்: குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில், சட்டவிரோதமாக நடந்து வரும் கிரானைட் வெட்டி எடுக்கும் செயல் குறித்து ஆர்டிஐ மூலம் அம்பலப்படுத்திய அமீத் ஜெத்வா என்பவர் படுகொலை செய்யபப்ட்டுள்ளார். இதனால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்டிஐ சட்ட வசதியைப் பயன்படுத்தி பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர் ஜெத்வா. பத்திரிக்கை ஒன்றிலும் பணியாற்றி வந்தார். நேற்று இவர் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு முன்பு இரண்டு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

மிக நெருக்கத்தில் இருந்து ஜெத்வா சுடப்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தனது வக்கீல் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஜெத்வா சுடப்பட்டார்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியும், 2 துப்பாக்கிக் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலையாளிகள் யார் என்பது குறித்து இதுவரை துப்பு கிடைக்கவில்லை என்று குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கொலையாளிகள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்த எண்ணும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது.

பாஜக எம்.பி. மீது புகார்

இந்த நிலையில் பாஜக எம்.பி. ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக ஜெத்வாவின் தந்தை புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெத்வாவின் தந்தை பிகுபாய் கூறுகையில், பாஜக எம்.பி. டினு சோலங்கிதான் இதைச் செய்திருக்க வேண்டும். அவருக்கு இதில் தொடர்பு உள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே சிங்கங்கள் அதிகம் வசிக்கும் பகுதி கிர் வனப்பகுதிதான். இங்குதான் சிங்கங்களுக்கான சரணாலயமும் உள்ளது. இப்பகுதியில் பெருமளவில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்துதான் ஜெத்வா குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுதவிர, ஜூனாகத் மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதில் எந்த அளவுக்கு துப்பு துலங்கி உள்ளது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார்.

இதனால் பாஜக எம்.பி. சோலங்கி ஆத்திரமடைந்துள்ளார். இதுதொடர்பாக ஜெத்வாவை கடந்த 7 வருடங்ககளாக அவர் மிரட்டி வந்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெத்வாவின் கம்பா கிராமத்தில் உள்ள அலுவலகத்துக்கு வந்து நேரடியாக மிரட்டியும் சென்றுள்ளார். இந்த நிலையில்தான் ஜெத்வா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்தே சோலங்கி மீது சந்தேகம் வந்துள்ளது. இதுகுறித்து ஜெத்வாவின் தந்தை பிகுபாய் தொடர்ந்து கூறுகையில்,

எனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் எனக்கு திருப்தி அளிக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனத் தெரிவித்தார்.

எம்.பி. சோலங்கி தலைமறைவு

ஜெத்வா படுகொலையைத் தொடர்ந்து பாஜக எம்.பி. டினு சோலங்கி தலைமறைவாகி விட்டார்.

ஆர்டிஐ சேவகர்கள் கண்டனம்

இந்த சம்பவத்திற்கு குஜராத் ஆர்டிஐ சேவகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இதன் மூலம் எங்களை பயமுறுத்தி விட முடியாது. தொடர்ந்து நாங்கள் ஆர்.டி.ஐ ஆயுதத்தை பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்துவோம் என உறுதிபட கூறியுள்ளனர்.

இதுகுரித்து ஜன்பாத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரினேஷ் பான்ட்யா கூறுகையில், ஆர்.டி.ஐ சேவகர் ஒருவர் கொலை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. ஆனால் இதனால் நாங்கள் பி்ன்வாங்கி விட மாட்டோம். ஜெத்வா மேற்கொண்டிருந்த பணிகளை நாங்கள் முடித்து வைப்போம். யாரெல்லாம் சட்டவிரோதமாக குவாரித் தொழிலில் ஈடுபட்டுள்ளனரோ அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம் என்றார்.

பான்ட்கி ஜோக் என்ற சேவகர் கூறுகையில், ஆர்டிஐயை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஹெல்ப்லைன் ஒன்றை தொடங்கியிருப்பதாக கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X