வங்கதேசம், நேபாளத்துக்கு 3 லட்சம் டன் அரிசி-கோதுமை ஏற்றுமதி
டெல்லி: வங்கதேசம், நேபாளத்துக்கு 3 லட்சம் டன் அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
நாட்டில் அரிசி, கோதுமை உபரியாக உள்ளதாகவும், மேலும் இந்த ஆண்டு இந்த தானியங்களின் உற்பத்தி எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் என்பதாலும் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூறினார்.
உள்நாட்டில் உணவு தானியங்களின் விலை மிகவும் அதிகரித்ததால், அரிசி-கோதுமை ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த ஆண்டு கட்டுப்படுத்தியது. இந் நிலையில் பருவ மழை சிறப்பாக இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் இந்த ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்க அரசு திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக நேபாளத்துக்கு 1 லட்சம் டன் அரிசி, கோதுமையும் வங்கதேசத்துக்கு 2 லட்சம் டன்னும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்படடுள்ளது.
உணவுப் பணவீக்கம் 9.67% ஆக குறைவு:
இதற்கிடையே உணவுப் பொருள்களுக்கான பணவீக்க விகிதம், ஜுலை 17ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 9.67 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது முந்தைய வாரத்தை விட 2.8 சதவீதம் குறைவாகும்.
இந்த ஆண்டில் கடந்த வாரத்தில்தான் உணவு பொருள்களுக்கான பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், உருளைக்கிழங்கு, வெங்காயம், பிற காய்கறிகளின் விலை குறைந்திருந்தது.
அதேசமயம் சில பருப்பு வகைகள், பால் பொருள்கள், பழங்கள் போன்றவற்றின் விலை முறையே 21.23 சதவீதம், 19.03 சதவீதம் மற்றும் 12.14 சதவீதம் அதிகரித்திருந்தது.


Click it and Unblock the Notifications
