அபரிமிதமாக தண்ணீர் வருகை-காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயம்
ஒகனேக்கல்: கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் காவிரிக் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி தமிழகத்திற்குள் நுழையும் பகுதியான ஒகனேக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல்களை செலுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 22,500 கன அடி நீர் இரு அணைகளிலிருந்தும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுவை வந்தடைந்தது. தற்போது ஓகனேக்கல் வழியாக அது காட்டாற்று வெள்ளமாக பாய்ந்தோடி வருகிறது.
இதன் காரணமாக அருவியில் குளிக்க தடை விதிக்கபப்பட்டுள்ளது. நேற்று இரவில் ஒகனேக்கல் அருவியில் பெரும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்டஆட்சித் தலைவர் பொறுப்பை வகித்து வரும் மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு உள்ள தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. எனவே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் சவாரி செல்லவும் தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்க வேண்டாம். பரிசல் சவாரியும் மேற்கொள்ள வேண்டாம். காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், சிறுவர்களை பாதுகாத்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கும் கூடுதலாக நீர் வரஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை அணைக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து, வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 81.47 அடியாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று காலை 23,600 கன அடியாக மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 900 கன அடியாக குறைக்கப்பட்டது. இருந்த போதும், நீர் திறப்பு 24,500 கன அடியாக உள்ளது.
எனவே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications