விட்டுக் கொடுத்த எதிர்க் கட்சிகள்: முடிவுக்கு வந்தது நாடாளுமன்ற சிக்கல்!

விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, குஜராத் போலி என்கெளண்டர் விவகாரம் காரணமாக எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால் நாடாளுமன்றம் கடந்த ஒரு வாரமாக முடக்கப்பட்டதையடுத்து இதற்கு தீர்வு காண எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
இக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அரசுத் தரப்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் அவையை சுமூகமாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பதாக அரசுக்கு எதிர்க் கட்சிகள் உறுதியளித்தன.
இதனால், கடந்த வாரம் 4 நாட்கள் எந்த அலுவலும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகளிலும் இன்று முதல் விவாதங்கள் தொடங்கும் என்று தெரிகிறது.
முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
விலைவாசி உயர்வுப் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதத்துடன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி பாஜக புதிய நோட்டீஸ் அளித்துள்ளதும் நினைவுகூறத்தக்கது.
இதை அரசு ஏற்குமா என்று தெரியவில்லை. ஆனால், விலைவாசி உயர்வின் தாக்கத்தைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க் கட்சிகளுடன் இணைந்து ஒரு தீர்மானத்தை இரு அவைகளிலும் நிறைவேற்ற காங்கிரஸ் தயாராக உள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications