காமன்வெல்த் நிதி முறைகேடு-விசாரணைக்கு நான் தயார்: கல்மாடி

காமன்வெல்த் போட்டிகளில் பல ஆயிரம் ரூபாய் அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்திருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதையடுத்து சுரேஷ் கல்மாடியை காங்கிரஸ் கட்சி ஒதுக்கி வைத்து விட்டது. பிரச்சினையை அவரேதான் சந்தித்துக் கொள்ள வேண்டும் என கூறி விட்டது.
கல்மாடி விலகவேண்டும் என்று கோரி பாஜக, இடதுசாரி கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. நாடாளுமன்றத்திலும் இது புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் எந்தவிதமான விசாரணைக்கும் தான் தயார் என கல்மாடி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் எந்தவிதமான விசாரணைக்கும் நான் தயார். அது நீதி விசாரணையாக இருந்தாலும் சரி, வேறு எந்த விசாரணையாக இருந்தாலும் சரி, சந்திக்க நான் தயார்.
மீடியாக்களில் வெளியாகியுள்ள புகார்கள் குறித்து தாராளமாக விசாரணை நடத்தப்படட்டும். அதில் தவறு செய்தவர்களாக நிரூபிக்கப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காமன்வெல்த் போட்டி தொடர்பான அனைத்து நடைமுறைகளும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலுக்கு பிறகே செயல்படுத்தப்பட்டன. இதில் எந்தவித தனி நபரின் தலையீடும் கிடையாது.
அனைத்தும் இங்கு ஒளிமறைவற்றதாகவே உள்ளது. முறைப்படியே அனைத்தும் நடந்துள்ளன என்று கூறியுள்ளார் கல்மாடி
ரூ. 100 கோடியை நிறுத்தி வைத்தது ரயில்வே
இதற்கிடையே, காமன்வெல்த் போட்டி முறைகேடு எதிரொலியாக இந்திய ரயில்வே ஸ்பான்சரில் இருந்து விலகுவதாக மிரட்டல் விடுத்து உள்ளது.
காமன்வெல்த் போட்டிக்கு ரூ.100 கோடி ஸ்பான்சர் தொகையாக வழங்குவதாக ரயில்வே அறிவித்து இருந்தது. முறைகேடு எதிரொலியாக அந்த தொகை வழங்குவதை ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது. ஒரு பைசா கூட தர முடியாது என்று தெரிவித்ததாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
போட்டி அமைப்புக்குழு சில நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தம் குறித்து எதையும் தெரிவிக்க மறுத்த காரணத்தாலும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
காமன்வெல்த் போட்டிக்கான போட்டி அமைப்பு குழு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.100 கோடி உதவி தொகை கேட்டது. முதலில் வழங்குவதாக இருந்த கிரிக்கெட் வாரியம் பின்னர் அதில் இருந்து முடிவை மாற்றிக் கொண்டது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications