சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்-சென்னையில் பொதுமக்கள் கடும் பாதிப்பு
சென்னை: சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் சென்னை நகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுமக்களும் சொல்லொணா அவதியை சந்திக்க நேரிட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பரமசிவம் நகரை சேர்ந்தவர் சபாபதி. இவரது மகன் அசோக்குமார் (21). இவர் செங்கல்பட்டு சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கிறார். இவர் செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் செல்லும் தனியார் பஸ்சில் நேற்று முன்தினம் சென்றார்.
அப்போது கண்டக்டரிடமும், பயணிகளிடமும் அசோக்குமார் தகராறு செய்ததாக கூறி பஸ் ஊழியர்கள் திருக்கழுக்குன்றம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். அங்கு மாணவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அசோக்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
போலீஸ் அடித்ததால் அவமானம் தாங்காமல் மருத்துவமனையிலேயே லுங்கியால் தூக்குப்போட்டுக் கொண்டார். மருத்துவமனையில் அவருக்கு துணையாக இருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். ஆபத்தான நிலையில் உள்ள அசோக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திகேயன் தற்கொலை முயற்சி செய்ததற்கு திருக்கழுக்குன்றம் போலீசார்தான் காரணம் என்றும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 100 பேர் நேற்று காலை 11 மணியில் இருந்து திடீர் போராட்டத்தில் குதித்தார்கள்.
பாரிமுனை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் இருந்து குறளகம் வரை மாணவ-மாணவிகள் கை கோர்த்தபடி மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.
குறளகம் எதிரே என்.எஸ்.சி. போஸ் ரோடு சந்திப்பில் நான்கு பக்கமும் ரோட்டை மறித்து நைலான் கயிற்றால் கட்டியும் மறியல் போராட்டம் செய்தனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்தது. இதனால் தென்சென்னை, மத்திய சென்னை பகுதியில் இருந்து எந்த வாகனங்களும் பாரிமுனை பகுதிக்கு போக முடியவில்லை. அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் தேங்கி கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பாரிமுனையில் ஏற்பட்ட நெரிசல் தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதி வரை காணப்பட்டது. வாகனங்கள் நகர முடியாமல் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பூந்தமல்லி நெடுஞ்சாலையும் வாகன நெரிசலில் சிக்கித் திணறியது. வடசென்னையில் இருந்து வந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள்கூட வாகனங்களில் செல்லமுடியாமல் நடந்து செல்லும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் நகரக் கூட முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகின.
போராட்டம் நடந்த இடத்தில் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர்கள் அறிவுசெல்வம், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டனர். இணை கமிஷனர் சேஷசாயி, போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தார். செங்கல்பட்டில்தான் சம்பவம் நடந்துள்ளது. நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமென்றால் அங்கே போய் நடத்துங்கள். சென்னை போலீசுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை. அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்று மாணவரிடம் கேட்டுப் பார்த்தார்.
ஆனால் போலீஸாரின் சமாதானத்தை மாணவர்கள் ஏற்கவே. தொடர்ந்து மக்களையும், வாகனங்களையும் தவிக்க வைத்து விட்டு 6 மணிக்குத்தான் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
மாலை 6 மணிக்கு பூக்கடை துணை கமிஷனர் அறிவுசெல்வம், உதவி கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் மாணவ-மாணவிகளை சந்தித்து ஒரு விளக்கம் அளித்தார்கள்.
மாணவர் அசோக்குமார் கொடுத்த புகார் அடிப்படையில் திருக்கழுக்குன்றம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி, போலீஸ்காரர்கள் நடராஜன், குப்புசாமி, பார்த்திபன், சவுந்தரராஜன், ராஜேந்திரன் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டதால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மாணவ-மாணவிகளை கேட்டுக்கொண்டனர். அதன்பிறகும் மாணவ-மாணவிகள் கலைந்து செல்லவில்லை.
பின்னர் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தனது சங்க நிர்வாகிகளோடு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் மத்தியில் பேசினார்.
அவர், இந்த பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை எடுத்துக் கூறி உங்கள் போராட்டத்தை இத்தோடு முடித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாகஅறிவித்தனர்.
போலீஸாரும் பிரச்சினை முடிந்ததே என்று நிம்மதியோடு கலைந்து சென்றனர். ஆனால் கிட்டத்தட்ட நாள் முழுவதும் சென்னை நகர போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்து சட்டவிரோதமாக நடந்து கொண்டு, பொதுமக்களை கடுமையான இன்னலுக்குள்ளாக்கிய சட்ட மாணவர்களின் செயல் பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரும் கொதிப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
சாதாரணமாக நடக்கும் மறியல் என்றாலே கண்மூடித்தனமாக தாக்கி போராட்டத்தைக் கலைக்கும் காவல்துறையினர் கிட்டத்தட்ட 7 மணி நேரம் போராட்டம் என்ற பெயரில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சாலைப் போக்குவரத்தையும், ஆம்புலன்ஸ் கூட போக வழியில்லாத அளவுக்கு மிகப் பெரும் வாகன நெரிசலையும் ஏற்படுத்திய சட்ட மாணவர்களை சற்றும் கண்டு கொள்ளாமல் அமைதியாக வேடிக்கைக பார்த்தது என்ன நியாயம். இதுதான் சட்டம் ஒழுங்கை காவல்துறையினர் மதிக்கும் லட்சணமா என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.
பார்வையற்றவர்களும், மாற்றுத் திறனாளிகளும் போராட்டம் நடத்தியபோது ஈவு இரக்கமே இல்லாமல் தடியடி நடத்தியும், குண்டுக்கட்டாக தூக்கியும் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட காவல்துறை நேற்று மட்டும் இப்படி பூணை போல மாறிப் போனது ஏன். சட்டக் கல்லூரி மாணவர்கள் என்றால் என்ன, அவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்தானே, அவர்கள் எது செய்தாலும் நியாயம் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும் என்றும் மக்கள் புலம்பியவண்ணம் சென்றனர்.
ஆனால் உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீலுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் எதிரொலியாகவும், சட்டக்கல்லூரியில் ஏற்கனவே நடந்த மாணவர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாகவும் நாங்கள் பட்ட கசப்பான அனுபவம்தான், இப்போது எங்களது கைகளை கட்டிப்போட்டுள்ளது. அவர்களது கோரிக்கையை ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தி புரிய வைக்கலாம். அவர்களுடைய கோரிக்கைகளில் நியாயம் இருந்தால் தீவிர விசாரணைக்கு பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் எதற்கும் கட்டுப்படாமல் மிகவும் பொறுப்புள்ள சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் இவ்வாறு போராட்டம் நடத்தும்போது, நாங்கள் என்ன செய்ய முடியும் என்று போலீஸ் தரப்பில் ஆதங்கப்பட்டனர்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதான் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்கள், வக்கீல்கள் நடத்தும் போராட்டங்களால் பாரிமுனைப் பகுதியில் அடிக்கடி இதுபோல பிரச்சினை ஏற்படுகிறது. இங்கு ஏதாவது நடந்தால் சென்னை நகரின் பாதிப் பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. அப்பாவி மக்களை பாதிக்கும் இதுபோன்ற போராட்டங்களை மிகக் கடுமையாக ஒடுக்க காவல்துறைக்கும், அரசுக்கும் உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் மட்டுமல்லாமல், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
கல்லூரிக்கு விடுமுறை:
நேற்று நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications