இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் சொத்துக்கள்-மதிப்பை அறிய உத்தரவு
டெல்லி: இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் சொத்துக்களின் உண்மையான மதிப்பை ஆராயுமாறு தேசிய நிதி நிர்வாகக் கழகத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவை விட்டுச் சென்ற பாகிஸ்தானியர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அரசின் வசம் உள்ளன. இவற்றுக்கு எதிரி சொத்துக்கள் என்று பெயர். இந்த சொத்துக்களின் உண்மையான மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் எனத் தெரிகிறது. ஆனால் உண்மையான மதிப்பு விவரம் அரசிடம் இல்லை.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள 2,186 எதிரி சொத்துக்களின் உண்மையான மதிப்பை ஆராய்ந்து கூறுமாறு சுயேச்சை அமைப்பான தேசிய நிதி நிர்வாகக் கழகத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பரீதாபாத்தில் இந்த அமைப்பு உள்ளது. நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் எதிரி சொத்துக்களை ஆராய்ந்து, அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு, தற்போதைய நிலை குறித்து அறிக்கை தருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
எதிரி சொத்துக்களை அதிகம் கொண்டுள்ள மாநிலம் உ.பி.தான். அங்கு மட்டும் 1468 உள்ளன. இதுதவிர மேற்கு வங்கத்தில் 351, டெல்லியில் 6, குஜராத்தில் 63, பீகாரில் 40, கோவாவில் 35, மகாராஷ்டிராவில் 25, கேரளாவில் 24, ஆந்திராவில் 21, பிற மாநிலங்களில் 93 உள்ளன.
இந்த சொத்துக்களின் சந்தை மதிப்பை அறிவியல் பூர்வமாக அறிய உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 1971ம் ஆண்டு இந்த மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ. 29.40 கோடி என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் சரியான கணக்கீடு செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications