கரூர் உர ஊழல் விவகாரம்-சிபிஐ விசாரணை கோரும் அதிமுக
கரூர்: கரூர் மாவட்டம் தாந்தோனி வேளாண்மை விற்பனை மையத்தில் நடைபெற்ற ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சியில் கடந்த 14-ம் தேதி அதிமுக சார்பில் பிரம்மாண்டமான கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசும் போது, கரூர் தாந்தோனிமலை வேளாண்மை விற்பனை மையத்தில் யூரியா மற்றும் உரத்தை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதாகக் கூறி அதை டி.என்.பி.எல். நிர்வாகத்திற்கு வழங்கியதில் சுமார் ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இந்த பணம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வரை சென்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக தரப்போ அல்லது தமிழக முதல்வர் கருணாநிதியோ விளக்கம் அளிக்காதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறி்த்து தாந்தோனி ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.ஆர். விஜய பாஸ்கர் கூறியதாவது,
திருச்சியில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட கண்டனக் கூட்டதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் அம்மா பேசும் போது, கரூர் தாந்தோனிமலை வேளாண்மை விற்பனை மையத்தில் சுமார் ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறினார்.
இந்த நிலையில் அந்த வேளாண்மை விற்பனை மையத்தின் அலுவலர் செல்லமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அம்மா சொன்னது உண்மையாகிவிட்டதையே இந்த சஸ்பெண்ட் விவகாரம் காட்டுகின்றது.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி ஏன் மவுனம் சாதிக்கின்றார். இந்த ஊழலை தமிழக அரசு அதிகாரிகள் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில் தலைமை அனுமதி பெற்று போராட்டம் நடத்துவோம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications