ஜெ.வை மிரட்டி குஷ்பு பேச்சு-கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக மகளிரணி நிர்வாகி கைது
நெல்லை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மிரட்டும் வகையில் பேசிய திமுக நடிகை குஷ்புவை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட நெல்லை மாநகர அதிமுக மகளிரணி துணைச் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை தாக்கிப் பேசி வருவதை கண்டித்து குஷ்பு ஒரு பேட்டி கொடுத்தார். அதில் ஜெயலலிதாவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். எங்களுக்கும் கீழே இறங்கிப் போய் பேச முடியும் என அவர் எச்சரித்திருந்தார்.
இதைக் கண்டித்து நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாநகர மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி நேற்று தனியாக வந்து ஜங்ஷன் பாரதியார் சிலை முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நடிகை குஷ்புவை கண்டித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். அதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து குஷ்பு பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேன்றால் போராட்டம் தொடரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ஜங்ஷன் மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் சென்று புவனேஸ்வரியை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் மறுக்கவே போலீசார் அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications