என்னைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்-கவர்னருக்கு கைதி கோரிக்கை
சென்னை: சிறையில் அடைபட்டுள்ள என்னைக் கருணை கொலை செய்து விடுங்கள் என்று கோரி தமிழக ஆளுநர் பர்னாலாவுக்கு, கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் கைதி கோரிக்கை விடுத்துள்ளார்.
1997ம் ஆண்டு கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், கோவை, திருச்சி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சிறையில் முன்பு 13 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 9 பேருக்கு தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலையாகினர். தற்போது உமர்பாரூக், ஜாகிர் என்ற ஜாகீர் உசேன் ஆகியோர் உள்ளனர். ஜாகீர் மீது குண்டுவெடிப்பு தவிர கொலை உள்ளிட்ட மேலும் 2 வழக்குகள் உள்ளன.
கடந்தத 13 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுள்ள ஜாகீர் உசேன், தன்னை விடுவிக்கக் கோரி முதல்வருக்கு முன்பு மனு அனுப்பினார். கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதுதள்ளுபடியானது.
இந்த நிலையில் ஆளுநருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார் ஜாகீர். அதில், வெடிகுண்டு வழக்கில் கைதாகி 20 வயதிலேயே சிறைக்கு வந்துவிட்டேன். கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் எனது பெற்றோரும் இறந்துவிட்டனர்.
நான் சிறைக்குள் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறேன். தற்போது அண்ணா பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
ஆகவே இதில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் என்னையும் விடுதலை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்ய அனுமதித்து, எனது உடலை தமிழகத்தில் உள்ள ஏதேனும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிடுங்கள் என்று கூறியுள்ளார் ஜாகீர் உசேன்.












Click it and Unblock the Notifications