மாஜி ராணுவ வீரர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை
நாகர்கோவில்: மாஜி ராணுவ வீரர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது.
நாகர்கோவி்ல் பொன்னப்பநாடார் காலனி வெங்கடசாமி தெருவில் முன்னாள் கேப்டன் எஸ்.பி. குட்டியின் வீடு உள்ளது. இவர் தமிழ்நாடு இந்துக்கள் வாழ்வுரிமை இயக்கதிதின் தலைவராக உள்ளார். நேற்று இரவு வீட்டில் மனைவியுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது படபடவென சத்தம் கேட்கவே அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தார்.
அப்போது வீட்டின் உள்பகுதியிலும், சன்ஷேடிலும் தீ எரிந்து கொண்டிருந்தது. அருகே மண்ணெண்ணெய், பெட்ரோல் நாற்றத்துடன் கூடிய பாட்டில்கள் கிடந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த அவர் தன் மனைவியுடன் சேர்ந்து தீயை அணைத்துள்ளார். பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேசமணி நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இவர் எழுதிய அறிவுக்கு எட்டிய கடவுள் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புத்தகத்தில் ராமர் பாலம் குறித்து சர்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அதனை எதிர்க்கும் யாரேனும் இதனை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தக வெளியீட்டு விழா திட்டமிட்டபடி இன்று காலை நாகர்கோவிலில் நடந்தது.












Click it and Unblock the Notifications