6வது முறையாகவும் கருணாநிதி முதல்வராவார்: ஸ்டாலின்
கடலூர்: தமிழகத்தில் அடுத்து நடக்கும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் வென்று 6வது முறையாகவும் அவர்தான் முதல்வராக பதவி ஏற்பார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கடலூரில் திமுக பிரமுகர் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசுகையில், எவ்வளவோ பணிகளுக்கு இடையில் நான் இந்த திருமணத்துக்கு வந்திருப்பதாக இங்கே பேசியவர்கள் கூறினார்கள். எவ்வளவு பணிகள் இருந்தாலும் இந்த பணிதான் எங்களை போன்றவர்களுக்கு சிறந்த பணி.
நீங்கள் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் உரிமையோடு கழக தோழர்களின் இல்ல விழாவுக்கு வருபவன் நான்.
உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் உள்ளிட்ட பல பொறுப்புகள் நான் வகித்து இருந்தாலும் நான் போற்றி பெருமையாக கருதுவது உங்களில் ஒருவன் என்பதையே.
5வது முறையாக தலைவர் கருணாநிதி முதல்வாக உள்ளார். 6வது முறையாக அவர்தான் முதல்வராக பதவி ஏற்பார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1967ம் ஆண்டுக்கு முன்பு சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை.
1967ம் ஆண்டு முதல்வராக அண்ணா பொறுப்பேற்றதும் சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி, முறைப்படி செல்லும் படியாகும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்ணா, பெரியார் வழியில்தான் இந்த சீர்த்திருத்த திருமணங்களை நாம் நடத்தி வருகிறோம்.
மணமக்கள் அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும். முன்பு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று பெரியவர்கள் வாழ்த்துவார்கள். மணமக்கள் அதனை தவறாக புரிந்து கொண்டால் நாடு என்னாகும் என்பதை மணமக்கள் மறந்துவிடக்கூடாது.
மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டவேண்டும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications